பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்று பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 16-வது முறையாக மும்மொழிப் போட்டி விமரிசையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த 28 தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்றனர்.
மும்மொழிப் போட்டி நிறைவு விழாவில் பினாங்கு மாநில புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யாப் சூ உய் கலந்து கொண்டார். இனி வரும் காலங்களிலும் பினாங்கு இந்தியர் சங்கம் இப்போட்டியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ரிம7000-ஐ நன்கொடையாக வழங்கினார். சிறப்பு விருந்தினராக வருகையளித்த சட்டமன்ற உறுப்பினர் யாப் சூ உய் அவர்களுக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்துக் கொளரவித்தனர்.
இந்த மும்மொழிப் போட்டியில் ஏழு வகை போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கட்டுரை எழுதும் போட்டி, கதை போட்டி, தமிழ் எழுச்சிப் பாடல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பல போட்டிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளின் மாண்பினை மாணவர்களிடையே வளப்படுத்தும் பொருட்டு திருக்குறளின் கருத்தை மையமாக வைத்து மலாய் மொழியில் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் கூறும் நற்பண்புகளை மையமாக வைத்து தமிழ்மொழியில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளின் வாயிலாக மாணவர்களின் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மும்மொழிப் போட்டி மாணவர்களின் இலை மறை காயாக மறைந்திருக்கும் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அரங்கமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு தொடங்கி பாலர்ப் பள்ளி மாணவர்களும் இப்போட்டியில் பங்குபெறுவது சாலச்சிறந்தது.
இந்த மும்மொழிப் போட்டியின் முதல்நிலை வெற்றியாளராக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் இரண்டாவது நிலை வெற்றியாளராக பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியும் மூன்றாவது இடத்தை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியும் இடம்பெற்றன. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யாப் சூ உய் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இப்போட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ஆலோசகர் திரு கணபதி ராவ் அவர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. தமது சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த விருது எனக் கூறிய திரு.கணபதி ராவ், இந்தியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் திரு ஆனந்த கிருஷ்ண நாயுடு அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திருஇராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மும்மொழிப் போட்டிக்கு வற்றாத ஆதரவை வழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
} else {