பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

Admin
whatsapp image 2025 03 25 at 10.25.29

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

“பினாங்கு-இந்தியா இடையே STEM, செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி கூட்டாண்மை ஆகியவற்றின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகத் திகழும்,” என பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மாநாட்டின் தொடக்க விழாவில் கூறினார்.
whatsapp image 2025 03 25 at 10.25.27

இந்தியாவும் பினாங்கும் நீண்ட காலமாக சிறந்த பொறியியல் வலிமை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி சாதனைகளுக்குப் பெயர் பெற்றவை என்று அவர் கூறினார். இந்தியா அதன் பொறியியல் திறமை மற்றும் ஆராய்ச்சி வலிமைக்காக உலகப் புகழ் பெற்றது. அதேவேளையில், பினாங்கு “கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” மற்றும் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கிறது, என தெரிவித்தார்.

“இரு தரப்பு ஒத்துழைப்பு மூலம், வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க பினாங்கும் இந்தியாவும் இணைந்து செயல்பட வழிவகுக்கும். மேலும் எதிர்கால தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழில்-பல்கலைக்கழக ஒத்துழைப்பு மூலம் திறன் மிக்க மனித மூலதனத்தை மேம்படுத்த வித்திடும்.
whatsapp image 2025 03 25 at 10.25.31 (1)

“கல்வி என்பது எதிர்கால வளர்ச்சியின் அடித்தளமாகும். எனவே, மாநில அரசு STEM கல்வி உருமாற்றம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் திறன்கள் மற்றும் IC வடிவமைப்பை ஆகியவற்றை பாடத்திட்டத்தில் இணைக்க ஊக்குவிக்கும். மேலும், தொழில்துறை வல்லுநர்கள் புதிய தலைமுறையை தொழில்நுட்ப திறன் மிக்கவர்களாக உருவாக்க தொழிற்கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களை ஊக்குவிக்க உத்வேகம் கொண்டு செயல்படும்.
whatsapp image 2025 03 25 at 10.25.31
உலகளாவிய தொழில்துறை நிலப்பரப்பை செயற்கை நுண்ணறிவு மறுவடிவமைப்பு செய்தாலும், அது நெறிமுறை மற்றும் சமூக சவால்களையும் கொண்டு வருகிறது. அதற்குப் பொறுப்பான நிர்வாக செயல்முறை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் தொழில்துறை செயல்திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தெளிவான நெறிமுறை கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் நிலையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“தற்போது, பினாங்கில் ஐந்து இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) செயல்படுகின்றன. இந்த உச்ச மாநாடு அதிக இந்திய நிறுவனங்களை முதலீடு செய்ய ஈர்க்கும் என்றும் உள்ளூர் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் சுழற்சி முறையில் மலேசியா ஆசியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான தருணம், என்றார்.

இந்நிகழ்ச்சியில், சமூகநல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு மற்றும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

“இந்த உச்ச மாநாடு பயனுள்ளதாக அமைவதோடு, பினாங்கு மற்றும் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஒன்றிணைந்து மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்க அதிக இந்தியா நிறுவனங்களின் வருகையை வரவேற்கிறோம்,” என்று மாநில இரண்டாம் துணை முதலமைச்சரும் மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது, இந்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து பினாங்கின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

அதே வேளையில், உலகளாவிய குறைக்கடத்தித் தொழில்துறையில் பினாங்கு ஒரு முக்கிய மையமாகவும், இது தற்போது உலகளாவிய குறைக்கடத்தி தயாரிப்பு விநியோகச் சங்கிலியில் 6.5% பங்களிக்கிறது. எனவே, இந்திய வணிகங்கள் பினாங்கில் வலுவான ஆதரவைக் காணலாம், என ஜக்தீப் விளக்கமளித்தார்.

“இந்தியா – பினாங்கு இடையே பல துறைகளில், குறிப்பாக புத்தாக்கத்திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான பரந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

“இந்த மூன்று நாள் உச்ச மாநாட்டில் இந்தியாவிற்கும் பினாங்கிற்கும் இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு அடுத்த பத்து ஆண்டுகளில் இரு பிரதான இடங்களின் வளர்ச்சியை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என மலேசியாவுக்கான இந்தியா தூதர் திரு. பி.என். ரெட்டி தெரிவித்தார்.