பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன் முயற்சியில் மலேசியாவில் முதல் பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகம் அறப்பணி வாரிய வளாகத்தில் நிறுவப்பட்டு 2019-ஆம் திறப்பு விழாக் கண்டது.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு வந்த இந்தியர்களின் வரலாற்றையும் மரபையும் பறைச்சாற்றும் வகையில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காட்சியகத்தில் 100 வருடம் பழமையான உணவு தூக்கு சட்டி (டிபன் கேரியர்), 300 ஆண்டுகள் பழமையான கால் சிலம்புகள், 200 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி, எழுத்தாணி மற்றும் மலேசிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பழங்கால பொருட்களான வெற்றிலைபாக்கு பெட்டி, 100 ஆண்டுகள்பழமையான ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்துமணி, 100 வருடங்கள் பழமையான யானை தந்தம், வெள்ளியினால் செய்யப்பட்ட கால்கட்டை (பழங்கால செருப்பு) 100 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் மலேசிய இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த புகைப்படங்கள், 1957 மலேசிய சுதந்திர காலக்கட்டத்தின் சேகரிப்புகளான தமிழில் எழுதப்பட்ட மலேசிய வரைப்படம், மலேசிய சுதந்திர நாளன்று வெளியிடப்பட்ட மலேசிய வரைப்படம் தாங்கிய ஆண்கள் சட்டை மற்றும் ஏராளமான புராதான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வருகையாளரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐந்து பிரிவுகளாக திறக்கப்பட்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய இந்திய மரபியல் அருங்காட்சியகம் இந்தியர்களின் பண்டைய காலத்து தொழில் திறன், அவர்கள் இந்தியாவில் இருந்து பினாங்கிற்கு வருகையளித்த கப்பல் மற்றும் பயணச் சீட்டு காட்சி, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கைமுறையில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள், குழந்தைகள் பொருட்கள், திருமண வைபவ காட்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் என ஐந்து பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இந்தியர்கள் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் வெகுவாக கவரும் என்பது வெள்ளிடைமலை.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், இந்த அருங்காட்சியகத்தை அதன் காப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் வழிநடத்தி வருகின்றது.
இந்தப் புராதான அருங்காட்சியகத்தை காண பள்ளி மாணவர்கள், கல்லூரி மற்றும் உயர்க்கல்வி மாணவர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானவர் வருகையளிக்கின்றனர். சீன மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இங்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியின் போது திரு.பிரகாஷ் இதனைக் குறிப்பிட்டார்.
“தமிழ் மூதாதையர் வாழ்க்கைமுறை மற்றும் பாரம்பரியம் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பொருட்களும் நம் பொக்கிஷங்கள், இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவது போல இனிய பழைய நினைவுகளை நம் கண் முன்னே நிழலாட செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை,”என பிரகாஷ் குறிப்பிட்டார்.
பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகம் ஒவ்வொரு புதன்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை காலை மணி 10.00 முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். இக்காட்சியகத்திற்கு எவ்வித நுழைவுக் கட்டணமும் இல்லை.
மேலும், மாநில அரசு பல்வேறு கலாச்சார அம்சங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதற்கு இந்த அருங்காட்சியம் சிறந்த சான்றாக அமைகிறது. இந்த அருங்காட்சியகம், மாநில மற்றும் மலேசிய இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு பெரிய மையக்கல்லாக திகழ்கிறது.