ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிதியுதவி வழங்கி வருகிறது. அண்மையில், சுமார் 15 மாணவர்களுக்கு ரிம13,500 நிதி ஒதுக்கீட்டில் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப நிதி பகிர்ந்து வழங்கப்பட்டதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 9 இளங்கலை பயிலும் மாணவர்களும் 6 டிப்ளோமா மாணவர்களும் இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கல்வி நிதி வழங்கப்படுவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 37 மாணவர்கள் இத்திட்டத்தின் வழிப் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம்18 மாணவர்கள், மார்ச் மாதம் 4 மாணவர்கள், மே மாதம் 15 மாணவர்கள் என்று இதுவரை ரிம34,700-ஐ பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வழங்கியுள்ளது என்று காசோலையை எடுத்து வழங்கியப்பின் இவ்வாரியத் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் விவரித்தார்.
மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் தினேஷ் வர்மன் கூறுகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்ந்து மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தி பல முன்னெடுப்புத் திட்டங்கள் வழிநடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இத்திட்டம் தொடர்ந்து வழிநடத்தப்படும் என செனட்டர் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 308 மாணவர்கள் நன்மைப் பெற்றனர். இத்திட்டத்திற்கு ரிம376,250 நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களின் ஒவ்வொரு விண்ணப்பமும் நன்குப் பரிசீலிக்கப்பட்டு தேர்வுச் செய்யப்படுகிறது என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பினாங்கில் பிறந்து பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அல்லது பினாங்கில் பதிவு செய்யப்பட்டு பினாங்கில் வசிக்கும் வாக்காளர் பெற்றோர்கள் இந்தக் கல்வி நிதியுதவியைத் தங்கள் பிள்ளைகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், தகுதிப் பெற்ற எல்லா விண்ணப்பதாரர்களும் இந்தக் கல்வி நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
பினாங்கு கொம்தார் கட்டிடத்தின் 30 வது மாடியில் இயங்கி வரும் பினாங்கு இந்து அறவாரியத்தைத் தொடர்புக் கொண்டு நிதியுதவிப் பெற விண்ணப்பிக்கலாம் அல்லது www.hebpenang.gov.my என்ற அகப்பக்கத்தின் வழியாகவும் தொடர்புக் கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.