ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் எச்சரித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக புலனம் வாயிலாக ஒரு பொறுப்பற்ற தரப்பு அவதூறுகளைப் பரப்பி சமூக வலைதலங்களில் இந்த விவகாரம் பரவி வருவதை தொடர்ந்து இராயர் இன்று பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைப் பிரதிநிதித்து ஆர்.எஸ்.என் இராயர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
“சமூக வலைதலங்களில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆவணங்கள் கொம்தாரில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு போன்று எவ்வித ஆவணமும் கொம்தாரில் இருக்கும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து வெளியேறவில்லை.
“அந்த அலுவலகத்தை கொம்தாரில் இருக்கும் இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அனைத்தையும் பரிசோதித்து விட்டோம். அம்மாதிரியான விவகாரம் எதுவும் நிகழவில்லை,” என பினாங்கு இந்து அறப்பணி வாரிய செயலாளர் டாக்டர் விஷாந்தினி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
இதனிடையே, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்று எட்டு மாத காலத்தில் பி40 குழுவினரை சேர்ந்த இந்தியச் சமூகத்திற்கு கல்வி, மருத்துவம் என பல்வகை உதவிகளை வழங்கி வருகின்றனர்.
“இங்கு எவ்வித ஒழுங்கு முறைகேடும் நிகழவில்லை; அனைத்து நடவடிக்கைகளும் முறையான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. பினாங்கு இந்து அறப்பணி வாரிய பணப் புழக்கம், திட்டம் மற்றும் செயல்பாடு அனைத்தும் அறப்பணி வாரிய செயலாளர் மற்றும் தலைவர் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும்,” என அறப்பணி வாரியத் துணை தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய அனைத்து ஆணையர்களும் கலந்து கொண்டனர்.
பினாங்கு வாழ் இந்தியர்கள் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது ஏதேனும் குறைப்பாடு கொண்டிருந்தால் முறையாக சம்பந்தப்பட்ட தரப்பினர் காவல் துறை அல்லது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் நேரடியாக புகாரளிக்க வேண்டும்.
அதைத் தவிர்த்து, உண்மையை அறியாமல் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என அனைத்து ஆணையர்களும் ஒருமனதாக பினாங்கு வாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டனர்.