ஜார்ஜ்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் பினாங்கு ஆளுநர் அறக்கட்டளையும் இணைந்து முதல் முறையாக சிறுநீரக பாதிப்பால் அவுதியுறும் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில ஆளுநர் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி பின் ஹாஜி அப்துல் ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் விரைவில் அமைக்கவிருக்கும் சிறுநீரக சிகிச்சை மையத்திற்கு உதவும் வகையில் ரிம10,000-ஐ மானியமாக வழங்கினார்.
“பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்குவாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் கல்வி, மருத்துவம் என அனைத்து வகையிலும் உதவிகளை நல்கி வருகின்றது.
“அதன் தொடர்ச்சியாக, இம்முறை முதல் முறையாக 50 சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஒருவருக்கு தலா ரிம1,000-மும் உணவுக்கூடையும் வழங்கப்படுகிறது”, என ஹர்மோனிகோ மையத்தில் நடைப்பெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பினாங்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு இந்தியர்களுன் சமூகநலன் மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில் ரிம 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கிவருவதற்கு டாக்டர் லிங்கேஸ்வரன் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், சட்டமன்ற உறுப்பினர்களான குமரன் கிருஷ்ணன் & ஜோசப் எங், பினாங்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஃபசிலா பிந்தி செய்க் அலாவுடின், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உருப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர், இந்த அறப்பணி வாரியம் இந்தியர்களுக்கு சேவையாற்றுவதையே தனது முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளது என தமதுரையில் தெளிவுப்படுத்தினார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் புதிய நிர்வாகத்தின் கீழ் கடந்தாண்டு 318 மேற்கல்வி தொடரவிருக்கும் மாணவர்களுக்கு ரிம 400,000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டும் 2023-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.