நிபோங் திபால் – பினாங்கு வாழ் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்ற உன்னத நோக்கத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பொது மண்டபங்களை நிர்மாணிக்கும் பணியில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் களம் இறங்கி உள்ளது.
இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் பொருட்டு நிபோங் திபால் திரௌபதி அம்மன் ஆலயம்; புக்கிட் தெங்கா ஶ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம்; பினாங்கு முருகன் ஆலயம் ஆகிய இடங்களில் பொது மண்படம் அமைக்க செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
“இந்திய சமூக முன்னேற்றத்திற்குக் கல்விதான் மூலதனம் என்பதை கருத்தில் கொண்டு கல்வி தரத்தை மேம்படுத்துவதோடு அடிப்படை தேவைகளில் ஒன்றான பொது மண்டபத்தை அமைப்பதும் அவசியமாகும்,” என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன் இவ்வாரியத்தின் ஶ்ரீ சூரியா இமாஸ் பாலர்ப்பள்ளி திறப்பு விழாவில் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிபோங் திபால் திரௌபதியம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள ஶ்ரீ சூரியா இமாஸ் பாலர்ப்பள்ளி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வழங்கிய ரிம150,000 நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளில் தனியார் பாலர்ப்பள்ளிகள் அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனநிறைவை அளிக்கிறது என டத்தோ இராமசந்திரன் அகம் மகிழத் தெரிவித்தார்.
இம்மாதிரியான பொது மண்டபங்களை இந்தியர்கள் பயனுள்ள வழிகளில் உதாரணமாக சமய நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
“இதனிடையே, இந்திய சமூதாயத்திற்காக இதுப்போன்ற செயல்திட்டங்களை அமல்படுத்த எங்களிடம் போதுமான நிலமும் பணமும் உள்ளது. பொறுப்பற்ற தரப்பினர் புறம் பேசுவதை நிறுத்திவிட்டு இதுப்போன்ற திட்டங்களை அமல்படுத்த எங்களுக்கு போதிய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
“தேசிய கணக்காய்வு துறைக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. ஒவ்வொரு கணக்குகளை திறன்பட நிர்வகித்து இந்தியர்களின் நலனுக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறப்பாக வழிநடத்தி வருகிறது,” என பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தமதுரையில் சூளுரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலயத் தலைவர் மணியம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.