செபராங் ஜெயா – “மலேசிய இந்து சங்கம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளை அனைத்து ஆலயங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அனைத்து ஆலயங்களும் ஆகம விதிகள் மட்டுமின்றி பொதுவான சமயம் சார்ந்த விதிகளையும் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் பக்தர்களிடையே எழும் குழப்பத்திற்குத் தீர்வுக் காண இயலும்,” என மலேசிய இந்து சங்க பினாங்குப் பேரவையின் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
ஆலய மாநாட்டில் பினாங்கு சங்கப் பதிவகம் (ROS), பினாங்கு காவல் துறை (PDRM), மலேசிய குற்றத் தடுப்பு நிறுவனம் (MCPF), ஆச்சாரியர் சங்கம் (கெடா, பினாங்கு & பெர்லிஸ்) ஆகிய தரப்பின் பிரதிநிதிகள் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் வழி, தற்போது நடைமுறைக் காணும் புதிய கொள்கை, நடப்பு தகவல் மற்றும் பல விதிமுறைகள் என ஆலய நிர்வாகத்துடன் பரிமாறப்பட்டது. அரசு, மற்றும் அரசு சாரா முகவர்களுடன் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது, என தர்மன் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்க பினாங்குப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில அளவிலான ஆலய மாநாட்டில் 68 ஆலயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நமது ஆலயம் மதம், சமயம் பறைச்சாற்றும் தலமாக மட்டும் செயல்படாமல் அது ஒரு சமூக மையமாகத் திகழ வேண்டும். இது நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்லாக அமையும். பினாங்கில் பல ஆலயங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு சமூகநலத் திட்டங்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது. எனவே, இம்மாநிலத்தில் அமைந்திருக்கும் அனைத்து ஆலயங்களும் சமூக மையமாக உருமாற்றம் காண வேண்டும், என தர்மன் கேட்டுக்கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அதன் வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயங்கள் மட்டுமின்றி அனைத்து மாநில ஆலயங்களுக்கும் ஆதரவு அளிக்கும். நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டும்.
ஆலய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் இவ்வாறு கூறினார்.
இந்த மாநாட்டில் மலேசிய இந்து சங்கம் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண தங்க கணேசன், தேசிய இந்து மகளிர் தலைவி டி.எம்.டாக்டர். எஸ். கலைவாணி, பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ புலவேந்திரன், பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத்தின் நிர்வாக உறுப்பினர் டத்தோ மேஜர் காளீஸ்வரன் மற்றும் ஆச்சாரியர் சங்கம் (கெடா, பினாங்கு & பெர்லிஸ்) தலைவர் சிவஸ்ரீ குருக்கள் சிவஸ்ரீ பத்மநாதன் குருக்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மாநாட்டை நிறைவு விழா செய்த ம.இ.கா பினாங்கு மாநிலத் தலைவரும் இந்து அறப்பணி வாரிய ஆணையருமான டத்தோ தினகரன் நமது சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.