பட்டர்வொர்த் – கடந்த 20 ஆண்டுகளாக பினாங்கில் இது போன்ற சமூக நற்பணிகள் ஆற்றி வரும் இந்துதர்ம மாமன்றம், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் சமூகநலம் சார்ந்த உதவிகளை வழங்க தவறியது இல்லை என்று இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள் நிலையத்தின் தலைவர் ந.தனபாலன் கூறினார். மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையம், ஓம் சக்தி ஆன்மீகம் மற்றும் தொண்டு அறக்கட்டளை இணை ஏற்பாட்டில் சமூக கடப்பாடாகச் சிறைக் கைதிகளுக்கு 3,500 தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு நிகழ்ச்சி இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.
பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் அனைத்து வகை பலகாரங்கள் மற்றும் முறுக்குகள் தயார் செய்தனர். தீபாவளி பண்டிகையை நாம் கொண்டாடுவதுடன், சிறைச்சாலை கைதிகளும் பண்டிகை நாளில் மகிழ்சியடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகள் பினாங்கு இந்து தர்ம மாமன்றம் சிறைச்சாலைக்கு பலகாரங்கள் செய்து அனுப்புவதாக இம்மன்றத் தலைவர் தனபாலன் கூறினார்.
பலகாரங்கள் தயாரிக்கும் இடத்திற்கு பினாங்கு மாநில சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத சமய விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் வருகையளித்தார்.
நாட்டில் சமய சார்புடைய இயக்கங்கள் தங்களின் உறுப்பினர்களோடு ஒன்றினைந்து சமய பண்டிகைக்கு தேவையான நற்காரியங்களை ஆற்ற வேண்டும், அதே வேளையில் சமூக சேவையும் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பினாங்கு இந்து தர்ம மாமன்றம்,தங்களின் கருணை மனதோடு சிறை கைதிகளையும் நினைத்து பார்ப்பது சிறப்பு அம்சமாகும் என்றும் சோங் எங் புகழாரம் சூட்டினார்.
மேலும், இத்திட்டம் வெற்றிகரமாக வழி நடத்த நிதியுதவியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தயார் செய்யப்பட்ட 3,500 பலகாரப் பொட்டலங்களை பினாங்கு சிறைச்சாலை மற்றும் ஜாவி சிறைச்சாலைக்குப் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் பினாங்கு இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் பலகாரங்களைத் தயாரித்து வசதி குறைந்தவர்கள்; கருணை இல்லங்கள்; சிறைச்சாலை கைதிகளுக்கு என பலகாரங்களை வழங்குவதுபோல், பினாங்கில் உள்ள அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் தங்களின் இயக்கங்களின் வழி சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பட்டர்வொர்த்தில் நடந்த பலகாரம் தயாரிக்கும் நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் டத்தோ மு.இராமசந்திரன், அன்பே ஆனந்தம் டாக்டர் குணசேகரன், டத்தோ கலைச்செல்வம் மற்றும் இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து, இந்துதர்ம மாமன்றம் வசதி குறைந்தவர்கள்,கருணை இல்லங்கள், தனித்துவாழும் தாய்மார்களுக்குப் புத்தாடை மற்றும் பலகாரப் பொருட்கள் வழங்குதல் போன்ற நற்சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சக மனிதர்கள் போலவே இவர்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பரிசுகள் வழங்கப்பட்டதாக அருள் நிலையத்தின் தலைவர் ந.தனபாலன் கூறினார். மேலும், வாழ்வில் ஒளியேற்றுவோம் திட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாமன்றம் ஏற்று நடத்தும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.