ஜார்ச்டவுன் – உள்ளூர் இரயில் துறையின் முன்னோடி மேம்பாட்டு தனியார் நிறுவனமான ‘Hartasuma Sdn Bhd’ பினாங்கு கொடிமலை கேபிள் கார் திட்டத்திற்கான குத்தகையைத் திறந்த குத்தகை முறையில் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.
பினாங்கு ஹில் கார்ப்பரேஷன் (PHC) தலைவருமான முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பல்வேறு அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டுக் குழு, RFP ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்க முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) மதிப்பிட்டுள்ளது, என்றார்.
‘Hartasuma Sdn Bhd’ நிறுவனத்தை மதிப்பீட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு பினாங்கு அரசாங்க குத்தகை குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
“இந்த நிறுவனம் இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட முதலீடு ரிம245 மில்லியன் ஆகும். இந்த திறந்த குத்தகை ஒப்பந்தம் 30 ஆண்டுகள் அடிப்படையாகக் கொண்டது,” என்று அவர் இன்று கொம்தாரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பினாங்கு கொடிமலை கேபிள் கார் திட்டத்திற்கான சிறந்த முன்மொழிவை (RFP) பெறுவதற்கான அழைப்பு கடந்த ஆண்டு (2021) ஜனவரி,13 அன்று தொடங்கியது. மேலும் கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட கட்டுப்பாட்டு அமலாக்கம் காரணமாக 2021 நவம்பர்,30 வரையில் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
RFPக்கான காலவரையறை முழுமையான மதிப்பீட்டு மற்றும் குத்தகைத் தேர்வு ஒப்புதல் செயல்முறைக்காக 2022 நவம்பர்,30 வரை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
வடிவமைப்பு, நிதி, கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இத்திட்டம் செயல்பாடுக் காணும் என்று கூறினார்.
“இத்திட்டம் ‘நிர்மாணிப்பு-நிதி-செயல்பாடு
-பரிமாற்றம்’ (BFOT) என்ற அடிப்படையில் , இதன் அனைத்து கட்டுமானம் மற்றும் செயல்பாட்டுச் செலவினங்களையும் இந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
“இந்த Hartasuma Sdn Bhd நிறுவனம், உள்ளூர் இரயில் துறையில் உள்நாட்டு முன்னோடி மற்றும் திட்ட மேலாண்மையில்
கிட்டத்தட்ட 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளது.
“இந்நிறுவனம் 400க்கும் மேற்பட்ட இரயில் கார்களை நாட்டின் பொதுப் போக்குவரத்துத் தேவைகளுக்கு வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதில் கோலாலம்பூரின் கெலானா ஜெயா வழித்தடத்திற்கான புதிய LRT இரயில்களும் இதில் அடங்கும்.
புகழ்பெற்ற MRT Line 1 மற்றும் லங்காவி கேபிள் கார் திட்ட செயல்முறையிலும் அனுபவமுள்ள நிர்வாகக் குழுவை இந்நிறுவனம் கொண்டுள்ளது,” என்று சாவ் கூறினார்.
இந்த நிறுவனத்தின் நிதித் திறன், முன்மொழியப்பட்ட கேபிள் கார் செயல்முறைகள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறன்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குத்தகையின் போது முன்மொழியப்பட்டப் பரிந்துரை அடிப்படையில் பினாங்கு கொடிமலை கேபிள் கார் திட்டம் வழங்கப்பட்டது, என்றும் அவர் கூறினார்.
மதிப்பீட்டுக் குழுவினர் இத்திட்டம் செயல்பாடுக் காணும் இடம் மற்றும் நிலைத்தன்மையையும் கவனத்தில் கொண்டுள்ளது.
இத்திட்டம் நிறைவுப்பெற மூன்று ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு கொடி மலை குடிமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகளுக்குச் சுமார் 100 ஆண்டுகளாகச் சேவை செய்து வரும் ஃபுனிகுலர் உடன் மாநிலத்தின் மற்றொரு சுற்றுலா சின்னமாக
கொடிமலை கேபிள் கார் திகழும் என்று சாவ் கூறினார்.
“இந்த பசுமையான போக்குவரத்து செயல்முறை சுற்றுலா அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதோடு சுற்றியுள்ள பகுதிகளின் சமூக-பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும். இந்த திட்டம் 500 வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு கொடிமலையில் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் முதல் 1.8 மில்லியன் பார்வையாளர்கள் வருகை அளிப்பதாகக் கூறினார்.
பினாங்கு கொடிமலை கேபிள் கார் பாதை 2.9 கிமீ நீளம் கொண்டது என்றும் 43 பெட்டிகள் கொண்டுள்ளன.
இந்த வண்டிகள் ஒரு மணி நேரத்திற்கு 1,000 பயணிகளை வினாடிக்கு 6 மீ வேகத்தில் கொண்டு செல்வதோடு கேபிள் கார் பயணம் சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது