ஆயிர் ஈத்தாம் – பினாங்கு கொடி மலை அஸ்தகாவின் மறு மேம்பாட்டுத் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது புகழ்ப்பெற்ற உணவு மையத்தை நவீன மற்றும் நிலையான உணவு இடமாக உருமாற்றம் காண வித்திடுகிறது.
பினாங்கு கொடி மலை வாரியத்தின் (PHC) பொது மேலாளர் டத்தோ சியோக் லே லெங்கின் கூற்றுப்படி, இந்த மேம்பாட்டுத் திட்டம் மூன்று கட்டங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
“முதல் கட்டம் ஒரு தற்காலிக அஸ்தகாவின் கட்டுமானத்தை உள்ளடக்கியது, இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி,25 முதல் செயல்பாட்டில் உள்ளது.
“இரண்டாம் கட்டத்தின் கீழ், தற்போதுள்ள கட்டமைப்புகளை இடிக்கும் பணியை உள்ளடக்கியது. இதைத் தொடர்ந்து, பிரதான கட்டிடத்தின் கட்டுமானத்திற்கான (மூன்றாம் கட்டம்) திறந்த குத்தகை முறை மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தகுதிவாய்ந்த ஒப்பந்தகாரர்கள் குத்தகை எடுக்க அழைக்கப்படுகிறார்கள்.
“இந்த மறு மேம்பாட்டுத் திட்டத்தின் முதன்மை குறிக்கோள், உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதோடு பினாங்கு கொடி மலையின் அழகைப் பாதுகாப்பதும் சுற்றுப்பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதாகும்,” என்று இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது சியோக் தெரிவித்தார்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்தார். இந்த விழாவில், சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய்; ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய்;
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரஜூ சோமு; முன்னாள் முதலமைச்சரும் ஆயிர் புத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்; ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங் சூன் சியாங் மற்றும் பினாங்கு மாநகர் கழக (MBPP) மேயர் டத்தோ இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் திறந்த குத்தகை செயல்முறை இறுதி செய்யப்பட்டவுடன், பிரதான கட்டிடத்தின் கட்டுமானம் 2025, ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இத்திட்டத்தின் காலக்கெடுவில் ஒரு குறிப்பிடத்தக்க மையல்கல்லைக் குறிக்கிறது.
“இத்திட்டம் வளர்ச்சி காணும் போது அதன் கூடுதலான புதுப்பிப்புகள் அறிவிக்கப்படும். 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று சியோக் கூறினார்.
2012 ஆம் ஆண்டு முதல், பினாங்கு கொடி மலை அஸ்தகா பினாங்கு வீதி உணவுகளுக்கானப் பிரபலமான மையமாகத் திகழ்கிறது என்றும், அதன் பல நிர்வாகிகள் கொடி மலையுடன் ஆழமான குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
“மறு மேம்பாட்டுத் திட்டத்தின் போது, தற்காலிக பினாங்கு கொடி மலை உணவு வளாகத்தை விற்பனையாளர்களுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் PHC வணிக தொடர்ச்சியை உறுதி செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில்,மாநில அரசாங்கத்தால் இத்திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ரிம20 மில்லியன், பினாங்கு கொடி மலை அஸ்தகாவை உலகத் தரம் வாய்ந்த உணவு இடமாக உயர்த்தும் என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்த உருமாற்றம், உள்ளூர் மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் தரம் கொண்ட உணவகம், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அழகியலை அறிமுகப்படுத்துகிறது.
“எனவே, மறு மேம்பாட்டுத் திட்டம், வசதி, நிலைத்தன்மை மற்றும் நவீன எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகும் உயர் தரம் கொண்ட உணவக அனுபவத்தை உறுதி செய்யும்,” என்று அவர் கூறினார்.
பினாங்கு கொடி மலையில் மேற்கொண்டு வரும் பினாங்கு கொடி மலை கேபிள் கார் திட்டம் மற்றும் ஸ்ட்ராபெரி பள்ளத்தாக்கில் உள்ள பழைய குடியிருப்புகளின் முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பிற முக்கிய திட்டங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று சாவ் மேலும் கூறினார்.
“அஸ்தகாவை நவீனமயமாக்கும் அதே வேளையில், யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பகமாக பினாங்கு கொடி மலையின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தத் திட்டம் உறுதியாக உள்ளது.
“மறு மேம்பாட்டுத் திட்டமானது தற்போதைய தளத்தின் இயல்பியலை பராமரிக்கும், நிலைத்தன்மை, செயல்திறன் மற்றும் பசுமை கட்டிட குறியீட்டு (GBI) சான்றிதழைப் பின்பற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும்,” என்று சாவ் கூறினார்.
புதிய அஸ்தகாவில் மேல்தளத்தில் பார்க்கும் தளம் மற்றும் செயல்பாட்டுப் பகுதி, புதிய குப்பை மையம் மற்றும் கழிவு மேலாண்மைக்கான உணவு உரம் தயாரிக்கும் அறை, ஒரு பெரிய மையப்படுத்தப்பட்ட சலவை பகுதி, விற்பனையாளர்களுக்கான சரக்கு வைக்கும் இடம் மற்றும் சிறந்த காற்று சுழற்சிக்கான மேம்பட்ட காற்றோட்டம் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் அமைக்கப்படும் என்று அறியப்படுகிறது.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் கூடுதலாக பிரத்தியேக குழந்தை அறை, சக்கர நாற்காலி மற்றும் முதியோர் நட்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட கூடுதல் மேம்பாடுகள், வசதியையும் மேம்படுத்தும். மொத்த இடத்தை 20,316 இலிருந்து 30,989 சதுர அடியாக 52% அதிகரிப்புடன், இந்த மேம்பாட்டுத் திட்டம் கொடி மலைக்கு புத்துயிர் அளிக்கும். இது சிகரப் பகுதியில் ஒரு மையப் புள்ளியாக திகழும்.
இந்த அஸ்தகாவின் இருக்கை திறன் 280 இலிருந்து தோராயமாக 530 ஆக இரட்டிப்பாகும். பிரதான உணவகம் கொடி மலை டத்தாரான் இருந்து தடையின்றி அணுகக்கூடியதாக இருக்கும்.