பினாங்கு கொடி மலையில் குப்பைகளைக் குறைக்க பொது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்

Admin
34e82daf 566f 407a 8cee 8742961f9e99

 

ஜார்ச்டவுன் – கடந்த ஆண்டு, பினாங்கு கொடி மலையில் உள்ள நடைப் பிரயாணம் பாதைகளில் இருந்து 200 கிலோ கிராம்(கி.கி) அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 75 கி.கிராம் அதிகமாகும்.

மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும், என்றார்.

whatsapp image 2025 03 13 at 12.01.58 pm (2)

“மலைப் பகுதியை சுத்தம் செய்ய அர்ப்பணிப்புள்ள பினாங்கு வாழ் மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதைக் காண ஊக்கமளிக்கிறது. அதேவேளையில், சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது,” என்று அவர் இன்று பினாங்கு கொடி மலை கீழ் நிலையத்தில் நடைபெற்ற ‘குப்பை அற்ற மலை’ (TFH2025) எனும் திட்டத்தின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.

பினாங்கு கொடி மலை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம் என்பதை விட அது பினாங்கின் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகிறது என்று வலியுறுத்தினார்.

“கொடி மலையை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பாகும், மேலும் அதன் அழகைப் பாதுகாக்க நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

TFH திட்டம் ஆறாவது முறையாக வருகின்ற ஜூன்,15 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். இது ‘மூன்கேட்’ நுழைவு A & B, பினாங்கு தாவரவியல் பூங்கா, ஜீப் பாதை, கீழ் நிலையம்/பாரம்பரிய பாதை, ஹை கீட் எஸ்டேட் மற்றும் ஜாலான் ஆயிர் ஈத்தாம் ஆகிய ஏழு முக்கிய மலையேற்றப் பாதைகளை உள்ளடக்கியது.

கொடி மலை உச்சியில் உள்ள டத்தாரான் புக்கிட் பெண்டேரா அருகே உள்ள அங்சானா மேடையைச் சுத்தம் செய்யும் பணியும் இதில் அடங்கும்.
வருகின்ற ஏப்ரல்,14 ஆம் தேதி பினாங்கு கொடி மலை கார்ப்பரேஷன் (PHC) வலைத்தளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்; பதிவு இலவசம். பங்கேற்பாளர்கள் PHC இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தலங்கள் மூலமாகவும் மேல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு 800 பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என்று PHC பொது மேலாளர் டத்தோ சியோக் லே லெங் நம்பிக்கை தெரிவித்தார்.

“பாராட்டுதலின் அடையாளமாக, ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு TFH 2025 கிட், ஒரு மின் சான்றிதழ் மற்றும் PHC இன் ஐஸ் கச்சாங் பற்றுச்சீட்டு வழங்கப்படும்,” என்று அவர் அறிவித்தார்.

மாநிலத்தின் பசுமை முயற்சிக்கு ஆதரவாக பங்கேற்பாளர்கள் தங்கள் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான ஆதரவாளர்களான Decathlon Gurney Paragon, The Habitat Foundation, The Habitat Penang Hill, Inari Amerton Berhad ஆகியோருக்கும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு மற்றும் டத்தோ சியோக் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.