ஜார்ச்டவுன் – “மாநில முதல்வர் உட்பட 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஒரு மாத கால ஊதியத்தை வழங்க உறுதியளித்தனர். இச்செயல் பினாங்கு மாநில அரசின் அர்ப்பணிப்பைச் சித்தரிக்கின்றது. இந்நிதி பினாங்கு கோவிட்-19 நிதியத்தில் சேர்க்கப்பட்டு இப்பிரச்சனைத் துடைத்தொழிக்கப் பயன்படுத்தப்படும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தனது முகநூல் நேரலையில் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மாநில காவல்படைத் தலைவர் மற்றும் பினாங்கு மாநில தேசிய பாதுகாப்பு வாரியத் தலைவருடனான சந்திப்புக் கூட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் குறித்த விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது என முதல்வர் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 94 விழுக்காடு பின்பற்றப்பட்டது என மாநில காவல்படைத் தலைவர் அறித்துள்ளார். இம்மாநிலத்தில் இந்த ஆணைப் பின்பற்றுவதை உறுதிச்செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனைகள் கடுமையாக்கப்படும்.
“பாதுகாப்புப் படை மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள், பொது மக்களுக்குச் சுமையை அதிகரிப்பது அதன் நோக்கம் அல்ல, மாறாக இந்த யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிக்காண வேண்டும் என்பதே அதன் தலையாய நோக்கம்,’’ என முதல்வர் வலியுறுத்தினார்.
மாநில அரசு வழிப்பாட்டுத்தலங்களான மசூதிக்கு ரிம1,000 மற்றும் மதராசாக்கு ரிம500-ஐ நிதியுதவி வழங்குவதாக ஊக்குவிப்புத் திட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
“மாநில அரசு ஶ்ரீ பெத்தாலிங் சமய நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வழிப்பாட்டுத்தலங்களில் கிருமிநாசினி மற்றும் துப்புரவுப்பணி மேற்கொள்வதற்காக இந்நிதி வழங்கப்படுகிறது.
“எனவே, பினாங்கு வாழ் பொது மக்கள் தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முற்பட வேண்டும். இந்த கடுமையானச் சூழலில் பொறுப்பற்ற தரப்பினர்களின் இன மற்றும் சமயம் அடிப்படையிலான சர்ச்சைகளுக்குச் செவிச்சாய்க்கக் கூடாது,” என விளக்கமளித்தார்.
இஸ்லாம் அற்ற வழிப்பாட்டுத் தலங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் அல்லது இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தல நிதியம் மூலம் நிதியுதவி பெறலாம் என்றார்.
தற்போது, அரசு சாரா இயக்கங்கள், தன்னார்வலர்கள் வசதிக் குறைந்த பொது மக்களுக்கு உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். மேலும் பொது இடங்கள் சுத்தம் செய்தில் அதிகமாக ஈடுப்படுகின்றனர்.
பொது மக்களின் சுகாதாரத்தில் முக்கியத்துவம் அளித்து மாநில அரசு விநியோக பணிகளை மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காலகட்டத்தில் ஒழுங்கற்ற விநியோக இயக்கத்தை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகத் திகழ்கிறது என முதல்வர் அறிவிறுத்தினார்.
“இந்த விநியோகப் பணிகளில் ஈடுபடும் நபர்கள் முறையான பாதுகாப்பு இல்லாமல் இந்த கோவிட்19 வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை,” என தெரிவித்தார்.
“இதன் மூலம் திட்டமிடப்படாத விநியோக முறைகளின் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளை வீணாக்குவதைத் தவிர்க்க இயலும்” என்றார்.
மேலும் குவாங் வா யித் போ நிறுவனத்திடம் இருந்து பினாங்கு கோவிட்-19 நிதியத்திற்கு ரிம500,000 நன்கொடை பெற்றதாக அறிவித்தார்.