ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர் வயது வரம்பு 21-ல் இருந்து 18-ஆக குறைக்கப்பட்டது. இது பினாங்கு மாநில அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2021 திருத்தத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவை சமர்ப்பித்து 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை அடுத்த தேர்தலில் வேட்பாளர்களாக அனுமதிக்கும் பொருட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது, என இளைஞர் மற்றும் விளையாட்டு, ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார்.
சபா, பெர்லிஸ், திரங்கானு, சரவாக், கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய மாநிலத்தின் வரிசையில் பினாங்கு ஏழாவது மாநிலமாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறது என சூன் லிப் சீ தெரிவித்தார்.
மேலும், முன்மொழியப்பட்ட வயது வரம்பு குறைப்பு குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்ற 3,475 இளைஞர்களில் 2,661 பேர்கள், (65.06%) ஆதரவு அளித்த வேளையில், 35 விழுக்காடு அல்லது 1,214 பேர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
“இந்த ஆய்வு கடந்த 2020 டிசம்பர்,8 முதல் 2021 ஜூன்,6 வரை இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டது.
“அதுமட்டுமின்றி, மாநில அரசு பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (பி.ஒய்.டி.சி) மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு கவனத்தை ஈர்க்கவும் பல்வேறு பிரச்சாரங்கள் வழிநடத்தப்பட்டன,” என்று அவர் மேலும் கூறினார்.
உலகம் ரீதியில் சமூக மற்றும் ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் 18 வயது முதல் தேர்தல் வேட்பாளர்களாக இருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என சூன் லிப் சீ கூறினார்.
இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அடுத்த தலைமுறையாக விளங்குவதால் அவர்களுக்கு
அரசாங்கக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், என்றார்.
பினாங்கு மற்றும் மலேசிய ரீதியில் சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தொழில்துறைகளின் முன்னேற்றத்திற்கு
இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
இந்த மசோதா இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தல், குரல் கொடுத்தல் மற்றும் பங்களிப்பு நல்கி நாட்டின் ஜனநாயகத்தை தேர்தல் மூலம் வடிவமைக்க ஒன்றிணைந்து செயல்பட துணைபுரிகிறது, என பாகன் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினருமான சூன் லிப் சீ, கூறினார்.
எனவே, மாநில அரசு பினாங்கில் குடிமக்கள் பிரச்சினைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும், என்றார்.
அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அடுத்த தேர்தலில் வேட்பாளராகும் சவாலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள இது சாத்தியமாகும், ” என்று மேலும் கூறினார்.