ஜார்ச்டவுன் – பினாங்கு சிலிக்கான் வடிவமைப்பு @5km+ முன்முயற்சி திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இது மாநிலத்தின் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அரசு இன்வெஸ்ட்பினாங்கு மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இது பாயான் லெப்பாஸ் தொழிற்துறையின் 5km+ சுற்றளவுக்குள் IC வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் ஆகியோரால் இன்று பாயான் லெப்பாஸில் உள்ள ஈஸ்டின் தங்கும்விடுதியில் துவக்க விழாக் கண்டது.
“அதன் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்புடன், பிரதான 5 கிமீ+ பகுதிக்குள், பினாங்கு சிலிக்கான் வடிவமைப்பு @5km+ முன்முயற்சியானது, அமெரிக்காவின் சான் ஜோஸில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள IC வடிவமைப்பு மையங்களின் தரத்திற்கு ஏற்ப திகழ்கிறது.
“இந்த முன்முயற்சியின் மூலம் பினாங்கு மாநிலம், IC வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இது மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அடுத்த கட்ட தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கான களத்தை நோக்கி பயணிக்கிறது,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.
இந்த முன்முயற்சியை முன்னெடுப்பதற்காக மாநில அரசாங்கம் ரிம60 மில்லியனை ஒதுக்கியுள்ளது. எனவே, தகுதியுள்ள நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரிம2 மில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்குகிறது என்று சாவ் மேலும் கூறினார்.
“இந்த ஊக்கத்தொகை ஒதுக்கீடானது ஜி.பி.எஸ் தெக்ஸ்பேஸ் இல் இடம் மற்றும் பயன்பாடுகளுக்கான மானியங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பாளர்களின் வசதிகளுக்கான அணுகல் மற்றும் பினாங்கு சிப் வடிவமைப்பு அகாடமி மூலம் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த நிதியளிக்கிறது.
“இந்த முன்முயற்சியானது மத்திய அரசாங்கத்தின் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. பொருளாதார அமைச்சு 2024 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது,” என்று சாவ் கூறினார்.
பினாங்கு குறைக்கடத்தி வடிவமைப்பு வளாகத்திற்குள் உள்ளூர் நிறுவனங்களை உருவாக்க உறுதி பூண்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“உண்மையில், ஜி.பி.எஸ் டெக்ஸ்பேஸில் உள்ள சிலிக்கான் ஆராய்ச்சி & இன்குபேஷன் ஸ்பேஸின் தொடக்க நிறுவனர்களாக ஐந்து உள்ளூர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
“இதில் உள்ளூர் நிறுவனங்களான
Filpal, Infinecs Lab, மற்றும் Silicon X, மற்றும் மேம்பாடுக் காணும் நிறுவனங்களான SkyeChip மற்றும் Sophic Automation ஆகியவை இடம்பெறும்.
இதற்கிடையில், பினாங்கு சிலிக்கான் வடிவமைப்பு @5km+ முன்முயற்சி மலேசியாவின் குறைக்கடத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இந்த அற்புதமான முன்முயற்சி திட்டம் குறைக்கடத்தி துறை மற்றும் AI புரட்சியை துரிதப்படுத்துகிறது. இது உலக தொழில்நுட்ப புத்தாக்கத் துறையில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்கிறது என கூறினார்.