“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
இவ்வுலகில் என்றும் அழியாச் செல்வமாகத் திகழ்வது கல்வி ஒன்றே. அதற்கொப்பான செல்வம் வேறு எதுவுமே இல்லை என்று பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் வலியுறுத்துகிறது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருவதற்காக ஒன்றுகூடும் தளமே பள்ளிக்கூடம். கல்விக்கு அடித்தளமாக விளங்கும் அந்தப் பள்ளிக்கூடமே சரியாக அமையாவிடில் மாணவர்களின் நிலைதான் என்ன?
1955-ஆம் ஆண்டு குலுகோர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலால் சுமார் 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம்தான் பினாங்கில் அமையப்பெற்றுள்ள சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளிக்கூடம் தற்பொழுது 230 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், யாவரும் மிகவும் பாராட்டுக்குரியவர்களாவர். ஏனெனில், கடந்த 57 ஆண்டுகளாக இந்தப் பள்ளி மாணவர்கள் கொள்கலனில்தான் (container) கல்வி பயின்று வருகிறார்கள். அடிப்படை வசதிகளைக் கூட பெற்றிராத இந்தப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில்தான் பயில வேண்டும் என்று கருதி அனுப்பி வைத்த இச்சுற்று வட்டார மக்கள் உண்மையிலேயே மிகவும் போற்றத் தக்கவர்களே. அதுமட்டுமல்லாது, இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், யாவரும் பெரும் மதிப்பிற்குரியவர்களாவர். அரசாங்கத் தேர்வான யூ.பி.எஸ். ஆர் எனப்படும் மதிப்பீட்டுத் தேர்வில் சிறந்த தேர்ச்சி விகிதத்தைப் பெறும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளில் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பள்ளிக்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று தவமாய் தவமிருந்தவர்களில் ஒருவர்தான் இப்பள்ளியின் முன்னால் கட்டடக் குழுத் தலைவர் காலஞ்சென்ற திரு சாமுவல் அப்பாராவ். எப்படியாவது இந்தப் பள்ளிக்குப் புதிய கட்டடம் அமைத்துவிட வேண்டும் என்ற ஆவல் கொண்டு அயராது உழைத்தவர்.
இப்படி இந்தப் பள்ளியின் உருமாற்றத்திற்காக ஏங்கியவர்கள் பலர். இதனை இலட்சியமாகவும் கனவாகவும் கொண்டு செயல்பட்ட ஆயிரக்கணக்கான உள்ளங்களை உச்சிக் குளிர வைக்கும் வகையில் கடந்த செப்டம்பர் 8-ஆம் திகதி பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிலப்பட்டா வழங்கும் விழா இங்கு புக்கிட் கம்பிர் சாலையில் அமையப்பெற்றுள்ள அந்தப் புதிய நிலத்திலேயே நடைபெற்றது. பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு இரவிந்திரன், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பழகன், அக்குழு செயலவை உறுப்பினர்கள் டத்தோ சுந்தராஜு, திருமதி மங்களேசுவரி, பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு காளிதாஸ், பினாங்கு மாநிலத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு வீராசாமி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவரும் பள்ளிக் கட்டடக் குழுத் தலைவருமான டாக்டர் சமயனமூர்த்தி மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் கட்டடக் குழு து.தலைவரும் பள்ளியின் அறங்காவலருமான திரு காத்தையா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு லோகநாதன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், ஸ்ரீ வீரமாகாளியம்மன் தேவஸ்தான தலைவர் திரு சாமி, பள்ளித் தலைமையாசிரியர் திரு நாதன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இவ்வரலாற்றுப் பூர்வ விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இப்பள்ளியைப் புதிய இடத்திற்கு மாற்றியமைக்க முன்னால் அரசு சுமார் 1 ஏக்கர் நிலத்தை வழங்கியது. எனினும் அந்நிலம் 4 மாடி கட்டடத்தைக் கட்ட ஏதுவான நிலமாக இல்லாததால் 30 சதவிகித மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த தறுவாயில் 0.9 ஏக்கர் நிலத்திற்கு மாற்றப்பட்டது. எனினும், இந்நிலமோ அச்சுற்று வட்டார மக்களுக்கு விளையாட்டுத் திடலாகத் திகழ்ந்து வந்ததால் அங்கு பள்ளிக்கூடம் வருவதை அவர்கள் வன்மையாக எதிர்த்தனர். எனவே, அம்மக்களின் நலனைப் பேணும் அதே வேளையில் பள்ளிக்கும் சிறந்ததொரு தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அரசு எண்ணம் கொண்டது. அதன் பொருட்டு, அதே பகுதியில் அமையப்பெற்றுள்ள 2.3 ஏக்கர் நிலத்தைத் தற்போதைய மாநில அரசு வெறும் ஏழே மாதங்களில் வழங்கிச் சாதனை புரிந்தது. இப்பள்ளியின் கட்டுமானப் பணியின் செலவுக்கு மத்திய அரசு ரி.ம 2.6 கோடி மானியம் வழங்கியுள்ளது. இன்னும் ஒராண்டுக்குள் இப்பள்ளியின் கட்டுமானப் பணி நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவரும் பள்ளிக் கட்டடக் குழுத் தலைவருமான டாக்டர் சமயனமூர்த்தி தம் உரையில் கூறிச்சென்றார்.
மலேசியாவில் அமையப்பெற்றிருக்கும் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் வேற்று நிலத்தில்தான் வீற்றிருக்கின்றன. அவ்வகையில் பினாங்கு சுப்பிரமணிய தமிழ்ப்பள்ளி தனக்கென சொந்த நிலத்தைப் பெற்றிருப்பது மிகவும் பெருமைக்குரியது என பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பழகன் தம் உரையில் கூறினார். குறைந்த வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்த இப்பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளைப் பதிந்து இன்றுவரை வற்றாத ஆதரவை நல்கிவரும் பெற்றோர்களுக்குத் தம் வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். புதிதாகக் கட்டப்படும் இப்பள்ளி பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் கீழ் வருவதால் இப்பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாம் நிச்சயம் செய்வார் என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு இரவீந்தரன் கூறினார். தொடர்ந்து, நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி உயரமான பகுதியில் அருமையான நிலத்தைப் பெற்றிருப்பது தமக்கு ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அளிப்பதாக இரண்டாம் முதல்வர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார். மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளுக்கு என்றுமே செவி சாய்த்து வருகிறது என்றால் அது மிகையாகாது. பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் ரி.ம 1.75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதே இதற்குத் தகுந்த சான்றாகும். மேலும், உருவமற்றுக் கிடந்த அஸாத் தமிழ்ப்பள்ளி இன்று எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் மக்கள் கூட்டணி அரசே காரணம் என்று வலியுறுத்திக் கூறினார். இன்றைய விழா பினாங்கு முதல்வர் தமிழ்ப்பள்ளிகளின் மீது கொண்டுள்ள அக்கறையையும் அதற்காக அவர் எடுத்து வரும் முயற்சிகளையும் நிரூபித்துள்ளது என்று பெருமிதம் கொண்டார்.
மக்கள்நலன் சார்ந்த கொள்கைகளைக் கடைபிடிக்கும் அதே வேளையில் , மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் சிறந்த திட்டங்களைத் தீட்டிவரும் மக்கள் கூட்டணி அரசு பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் நீண்ட நாள் கனவைப் பளிக்கச் செய்ததில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தம் உரையில் கூறினார். மலேசியாவிலேயே பினாங்கு மாநிலத்தில்தான் தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களைய சிறப்புச் செயற்குழு ஒன்று செயற்பட்டு வருகிறது. அதன் பயனாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இப்பள்ளியின் போராட்டத்திற்கு முற்று வைத்திருப்பது மன நிறைவை அளிக்கிறது என்றார். மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொருளாதார அடைப்படையில் மட்டும் உதவாமல் செம்மொழியான தமிழ்மொழியை அங்கீகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. மலேசியாவிலேயே முதன் முதலாகச் சாலை வழிகாட்டிப் பலகையைத் தமிழில் அமைத்துச் சரித்திரம் படைக்கவுள்ளது என அறிவித்த முதல்வர் வந்திருந்தவர்களின் பாராட்டுகளையும் கரவொலிகளையும் பெற்றுக் கொண்டார்.
தமிழ்மொழியை நேசிப்போம்; தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்!!!