பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பிறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் காலக்கட்டத்தில் பல தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகளைத் தீர்வுக் காண்பதில் உத்வேகம் கொண்டு செயல்படுகிறார்.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தராஜு, மலக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மேஃபீல்ட் தமிழ்ப்பள்ளி மற்றும் ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைகள் குறித்து முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
“ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு நிலத்தை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்நிலத்தின் விலை குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) தற்போது இந்நிலத்தை மதிப்பீடு செய்து வருகிறது.
“இந்தப் பள்ளியில் தற்போது சுமார் 200 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளி முறையான உள்கட்டமைப்புடன் மீண்டும் நிர்மாணிக்கபட்டால், அடுத்த பருவத்தில் 500 முதல் 600 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
மலக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் மேஃபீல்ட் தமிழ்ப்பள்ளி பற்றி பேசுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நில உரிமையை மாற்றுவது குறித்து விவாதிப்பதற்காக மேம்பாட்டாளர்களைச் சந்தித்ததாக சுந்தராஜூ கூறினார்.
இந்த சந்திப்பு சாதகமான முடிவை அளித்துள்ளது, என தெரிவித்தார்.
“தமிழ்ப்பள்ளிகளை 20-ஆம் கற்றல் தளமாக மறுசீரமைப்பு செய்ய நிதி திரட்டுவதற்கு நிலத்தின் உரிமை பெறுவது அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
சுந்தராஜுவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கப் பதிவில், மேஃபீல்டு தமிழ்ப்பள்ளி நில உரிமையாளர், தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுவினர் பெயரில், நில உரிமையை மாற்றக் கோரி தங்கள் இயக்குநர் குழுவிற்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுத ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளையில், மலக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில உரிமையாளர், அப்பள்ளிக்கு நில உரிமையை மாற்றுவதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க ஒப்புக்கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு கவலையளிக்கும் நிலைமையில் இருப்பதற்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்று சுந்தராஜு சுட்டிக்காட்டினார்.
“வரலாற்று ரீதியாக பார்க்கும் போது, இந்தியச் சமூகத்திற்காக தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கோவில்கள் தோட்டங்களில் நிறுவப்பட்டன.
“இருப்பினும், இப்போது தோட்டங்கள் இல்லை, அவை இருந்தாலும், உள்ளூர் இந்தியர்கள் அங்கு வசிப்பதில்லை; மாறாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
“மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தமிழ்ப்பள்ளிகளை மாற்றி அமைக்க வேண்டும். இம்முயற்சியை செயல்படுத்துவதே எனது பொறுப்பாகும்.
தமிழ்ப்பள்ளிகளில் சேருமாறு மக்களை வற்புறுத்துவதற்குப் பதிலாக, அப்பள்ளிகளை அஇந்தியச்கு அருகாமையில் மாற்றுவது சிறப்பு,” என்று அவர் மேலும் கூறினார்.
கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி போன்ற பிற தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகளை அடுத்த நான்கு ஆண்டுகளில் தீர்க்க சுந்தராஜூ இணக்கம் பூண்டுள்ளார்.
“பினாங்கில் உள்ள மொத்த 28 பள்ளிகளில், பல பள்ளிகள் நிலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. பிறை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவற்றில் குறைந்தது 50% ஆவது வெற்றிகரமாக தீர்க்க முடிந்தால், அதை நான் ஒரு சாதனையாகக் கருதுவேன்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேசமயம், கல்விக்காக, குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதித் திரட்டுவதற்காக ஒரு அரசு சாரா அமைப்பு அல்லது அறவாரியம் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை ஒன்றை அமைக்கும் பணியில் இருப்பதாக சுந்தராஜு குறிப்பிட்டார்.
“இது தவிர, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முதன்மைக் கல்வியாளர்களாகக் கருதப்படுவதால், திறமையான பெற்றோரைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
“சில சமயங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க முயலும்போது தற்செயலாகத் தவறான மொழி அல்லது உடல் ரீதியான வன்முறைகளைக் கையாளுகின்றனர்.
“இத்தகைய அணுகுமுறைகள் இன்றைய ‘நவீன குழந்தைகளால்’ ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது அவர்களுக்குக் கூடுதலான மன அழுத்தத்திற்கு வித்திடும்.
“இது பெற்றோருக்கு ஊக்கமளிக்கும் பட்டறை போல் நடத்தப்படும். இந்த பட்டறைகளை ஆண்டுதோறும், குறிப்பாக அரையாண்டு அல்லது காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படலாம்,” என கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மீள்பார்வை புத்தகங்களை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பரில், மாநில அரசு, தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழு மூலம், 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ரிம55,000 செலவில் 15,900 தமிழ் மீள்பார்வைப் புத்தகங்களை வழங்கியதாக சுந்தராஜு பகிர்ந்து கொண்டார்.
மேலும், அடுத்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்குத் தயாராகும் 52 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 600 இலக்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
“கல்வி என்பது என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று, அது ஒரு நபரின் எதிர்காலத்தையும் சிந்தனையையும் தீர்மானிக்கிறது. அது ஒன்றே ஒரு சமூகத்தை முன்னேற்ற முடியும்.
“ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடினமான பயணத்தை கடந்து வருகிறார்கள். சிலர் திசைதிருப்பப்பட்டு விலகிச் செல்கிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே கஷ்டங்களைச் சந்தித்த பிறகும் ‘நேர் வழியில்’ நடக்கிறார்கள்.
“தமிழ்ப் பள்ளிகளுக்கும் சமூகத்திற்கும் உதவுவதில் நான் மிகவும் உறுதிபாட்டுடன் செயல்பட உத்வேகம் கொள்கிறேன்,” என்றார்.