பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு வருடாந்திர மானியத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை – குமரேசன்

Admin
b73bb312 1cfc 496e a073 f08a2a72d535 A. Kumaresan

ஜார்ச்டவுன் – மாநில அரசு பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்ப்பள்ளிகளுக்கும் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரிம2 மில்லியனை ஆண்டுதோறும் வழங்கி வருவது பாராட்டக்குரியது.

இந்தப் பள்ளிகளில் தற்போதுள்ள மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கு சிறந்த ஆதரவை வழங்கும் பொருட்டு ரிம2 மில்லியன் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க மாநில அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று  பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் வலியுறுத்தினார்.

“இது இந்திய மாணவர்களுக்கு மிகவும் உகந்த கற்றல் சூழலை உருவாக்கி அவர்களின் கல்வித் தேவைகளை ஆதரிக்கும்,” என்று அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

மாநில அரசு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி, தமிழ் பாலர்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் மற்றும் பஞ்சாப் பள்ளிகளுக்கும் வருடாந்திர மானியம் வழங்குகிறது.

மேலும், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கான புதியக் கட்டிடத்தை விரைந்து முடிக்குமாறு குமரேசன் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்க்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடன் தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட சிறப்புக் குழுவை அமைக்குமாறு மாநில அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.

மற்றொரு விவகாரத்தில், மாநில அரசாங்கம் வெளிநாட்டினருக்கான வீட்டு வாடகை தொடர்பாக தெளிவான மற்றும் முறையான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மாநில அரசு பரிசீலிக்க வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகளை முன்மொழிந்தார். அதாவது வீட்டு வாடகைச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், விரிவான வாடகை வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மற்றும் வாடகை வீடுகளில் பரிசோதனையை நடத்துதல் ஆகியவை அடங்கும்.

இந்தப் பரிந்துரைகள் நடைமுறை படுத்த வேண்டிய காரணங்கள் குறித்தும் சட்டமன்ற கூட்டத்தொடரில் விளக்கமளித்தார்.

“வீட்டு வாடகை சட்டமானது ஒரு யூனிட்டுக்கு குடியிருப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், தூய்மையை உறுதி செய்தல் மற்றும் கட்டிடப் பாதுகாப்பை பராமரித்தல் போன்ற முக்கியமான நிபந்தனைகளை விதிக்க அதிகாரிகளுக்கு ஒரு கட்டமைப்பாக செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

பினாங்கு அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் சிங்கப்பூர் நாட்டைப் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அங்கு வாடகை விதிமுறைகள் முறையாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன.

வாடகை வழிகாட்டுதல்கள் குறித்து, கட்டணம் செலுத்தும் நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய விஷயங்கள் போன்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என குமரேசன் இதனைப் பரிந்துரைத்தார்.

இந்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதில் அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாடுகளின் கூட்டு மேலாண்மை அமைப்பு (JMB) முக்கியப் பங்காற்ற முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

கூடுதலாக, வெளிநாட்டினரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளில்
வழக்கமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் இதன் வழி அந்த வீடுகள் பாதுகாக்கப்படுவதையும் தீயச் செயல்களில் இருந்து விடுப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என அறிவுறுத்தினார்.

“இது வீடுகள் நன்கு பராமரிக்கப்படுவதையும், மிக முக்கியமாக, சட்டவிரோதமாக குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.

 

 

வீட்டுவசதி மற்றும் கல்வி அடுத்து, சிறந்த பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பினாங்கு முழுவதும் ‘வாப்பிங்’ விற்பனை மற்றும் பயன்பாட்டை தடைச் செய்ய மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை குமரேசன் முன்வைத்தார்.