பினாங்கு தீவு வலம் வர “Hop-on Hop-off”

பினாங்கு மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த ““Hop-on Hop-off” புதிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து மூலம் பினாங்கு தீவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களான கடற்கரை, மலை பகுதிகள், ஜோர்ச்டவுன் பாரம்பரிய தளம், உணவுக்கடைகள் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணிகளைக் கொண்டு செல்லும் சிறந்த போக்குவரத்து சேவையாக அமைகிறது. இந்த பேருந்தின் மேற்பகுதி திறந்தநிலையில் காணப்படுகிறது. எனவே, இந்தப் பேருந்தின் மேற்பகுதியில் இருந்து பினாங்கு மாநிலம் காண்பதற்கு அற்புதமாக இருப்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
இந்தப் புதிய பேருந்து சேவையைப் பயன்படுத்த விரும்பும் சுற்றுப்பயணிகள் 33 பேருந்து நிறுத்தும் இடங்களில் இருந்து ஏறிக்கொள்ளலாம். இனிமேல் சுற்றுப்பயணிகள் பினாங்கு தீவில் சுற்றிப்பார்க்க விருப்பும் அனைத்து இடங்களையும் ஒரே நாளில் காண்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் வழி பினாங்கு மாநில சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதோடு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

படம் 1: “Hop-on Hop-off” பேருந்து
படம் 1: “Hop-on Hop-off” பேருந்து

இந்தப் பேருந்து சேவை தினமும் காலை மணி 9.00 தொடங்கி இரவு மணி 8.00 வரை பொது மக்கள் பயன்படுத்தலாம். இந்தப் பேருந்து பயன்படுத்தும் மலேசியர்கள் ரிம19 (12 வயதுக்கு மேற்பட்டோர்) ரிம12 (சிறு குழந்தைகள்) என கட்டணம் விதிக்கப்படுகிறது. அதேவேளையில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு ரிம45 (12 வயதுக்கு மேற்பட்டோர்) ரிம19 (சிறு குழந்தைகள்) என கட்டணம் விதிக்கப்படுகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு, “Elang Wah Sdn Bhd” எனும் நிறுவனம் முதலில் கோலாலம்பூரில் இந்தப் புதிய பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் இந்த சேவை தொடக்க விழாக் கண்டுள்ளது.