பினாங்கு தைப்பூசத் திருவிழா; தண்ணீர் மலை குமரனுக்குக் கொண்டாட்டம்

Admin

44714_586579881359466_1519025380_n

வெள்ளி இரதத்தில் பவனி வந்த சரவணப் பெருமானின் திருவருளைப் பெற பினாங்கு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு முன் தீபாராதனைகள் எடுக்கும் மக்கள் கூட்டம்

 

மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது. எழில்மிகு இயற்கை தலத்தையும், பசுமை நிறைந்த சூழலையும், மெருகூட்டும் பல கலை அம்சங்களையும் கொண்ட பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஒரு கோடி வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டுத் திருக்குட நன்னீராட்டு விழாவிற்குப் பிறகு கடந்த ஜனவரி 27-ஆம் திகதி தனது முதல் தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த அலையாக அலையாகத் திரண்டனர். பினாங்கில் செட்டிப் பூசம் என்றழைக்கப்படும் தைப்பூச முதல் நாள் வெள்ளி இரத ஊர்வலம்  அதிகாலை 6.30 மணிக்கு பினாங்கு வீதியில் அமையப்பெற்றுள்ள கோயில் வீட்டிலிருந்து நகரத்தார் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. இவ்வெள்ளி இரதம் 1894-ஆம் ஆண்டு இந்தியாவில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு மலேசியவிற்குக் கொண்டுவரப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட தங்க முருகன் சிலை மிகவும் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. சாலையெங்கும் தேங்காய்கள் குழுமியிருக்க பக்தர்கள் கூட்டம் புடை சூழ வெள்ளி இரதம் பவனி வந்தது. இந்தியர்கள் மட்டுமன்றி, சீனர்களும் இலட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர். இவ்வாண்டு உள்ளூர் வெளியூரிலிருந்து வந்த இந்திய மற்றும் சீன மக்கள் கூட்டத்தின் பெருக்கத்தினாலும் கந்தப்பெருமானின் திருவருளைப் பெற பக்தர்கள் அதிகளவில் தேங்காய்கள் உடைத்து  அர்ச்சனை தீபாராதனைகள் எடுத்ததால் இரத ஊர்வலம் மிகத் தாமதமாகவே நாட்டுக் கோட்டை செட்டியார் ஆலயத்தை வந்தடைந்தது.

பினாங்கு தைப்பூசத்தின் புகழ்பெற்ற சிறப்பு அம்சமாகச் சாலை நெடுவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பந்தல்கள் திகழ்வது வெள்ளிடை மழையாகும். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சமூகப் பற்றாளர்களால் இவ்வாண்டு சுமார் 137 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அழகிய கலை வேலைபாடுகளையும் அலங்கரிப்புகளையும் கொண்ட பந்தல்களில் மக்களின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. தைப்பூச முதல்நாள் மாலை பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு இரவீந்திரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் ஆகியோர் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். பினாங்கு முதல்வரையும் இந்திய உயர்மட்டத் தலைவர்களையும் சந்தித்த மக்கள் அவர்களுடன் கைக்குழுக்கி நிழற்படம் எடுத்துத் தங்கள் உள்ளக்களிப்பை வெளிபடுத்தினர். பந்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வரவேற்றனர்.

537134_586615228022598_1673801579_n

தைப்பூச முதல் நாள் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்ட மாண்புமிகு துணை முதல்வர்  பேராசிரியர் ப இராமசாமி, மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு தனசேகரன், திரு இரவீந்திரன் (இடமிருந்து வலம்)

தைப்பூச முதல் நாள் மாலை 6 மணிக்கெல்லாம் பூச நட்சத்திரம் பிறந்ததால் மக்கள் அன்றிரவே தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கிவிட்டனர். பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். கதிர்வேலனுக்கு விரதமும் சைவமும் மேற்கொண்டு வேல்! வேல்! ஞான வேல் முருக வேல்! வீர வேல் என்று முருகனின் வாசகத்தை உரக்கக் கூறியபடி பக்தர்கள் 513 படிகளைக் கடந்து திருக்குமரனைத் தரிசிக்கச் சென்றனர். இவர்களுடன் சீனப் பெருமக்களும் இணைந்து மஞ்சள் ஆடையுடுத்தி பால் குடங்களையும் அலகு குத்தி காவடிகளையும் ஏந்தி சென்றது மெய்ச்சிலிர்க்க வைத்தது. இந்திய நாட்டுக்கு வெளியில் உள்ள தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக எழுப்பப்பட்டுள்ள தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருள் சூழ்ந்த அவ்விடத்தையே ஒளிமயமாகக் காட்சியளிக்க வைத்தது அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருந்தது.

கோலாலம்பூர் பத்து மலை வளாகம் பல வழிபாட்டுத் தலங்களைக் கொண்டிருப்பது போல் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் வழிப்பாட்டுச் சிலையும், இந்துக்களின் மூலக் கடவுளான அருள்மிகு கணேசர் ஆலயமும், முருகப் பெருமானின் முதல் பக்தனான இடும்பன் ஆலயமும், நாகம்மன் ஆலயமும் அமைந்திருப்பதுமட்டுமன்றி இவ்வாலயம் அமைந்திருக்கும் அதே சாலையில் நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் ஆலயம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை அமைந்திருப்பதும் பினாங்கு தைப்பூசத்தின் சிறப்பு அம்சங்களாகும். பினாங்கு தைப்பூசத்திற்கு வந்த பக்தர்கள் இவ்வாலயங்களுக்கும் சென்று வழிபட்டு அருள் பெற நல்ல வாய்ப்பாக அமைந்தது எனலாம். இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத் திருவிழா மிகப் பிரமாண்டமாகவும், பல இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்ட ஒரு வரலாற்றுப் பூர்வமான திருவிழாவாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

தைப்பூசத்தன்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங்குடன் இணைந்து துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய திரு தனசேகரன், திரு ஜெகதிப் சிங் டியோ, திரு டேனி லாவ் ஆகியோர் மாலை 5 மணிக்கு மேல் நாட்டுக் கோட்டை செட்டியார் ஆலயத்திற்கும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கும் வருகை மேற்கொண்டனர். ஸ்ரீ கணேசர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் முதல்வரும் அரசு உயர்மட்டத் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர். அங்கு சிறப்புரையாற்றிய முதல்வர் லிம் குவான் எங் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு வெகு விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள வட ஊர்திச் சேவையைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்தார். அலையென திரண்டிருந்த அங்குள்ள மக்களுக்கு அது மனதைத் தித்திக்க வைத்த ஓர் இனிப்புச் செய்தியாக அமைந்தது. பினாங்கு வாழ் இந்திய மக்களின் தேவைகளைத் தவராது நிறைவு செய்து வரும் மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து இந்தியர்களின் நலனைக் காக்கும் சிறந்த திட்டங்களை மேற்கொண்டு செயற்படும் என்று முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.