அழகிய பினாங்கு மாநிலத்தின் தோற்றத்திற்கு வித்திடும் நகராண்மைக் கழக ஊழியர்களின் சேவை அளப்பரியதாகும். ஓர் ஊழியனை அங்கீகரிக்கும் பொழுது அவனுடைய சேவை தலை வணங்கப்படுகிறது. அவ்வகையில் பினாங்கு மாநில நகராண்மைக் கழகத்தினரின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறந்த சேவை வழங்கிய ஊழியர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழா ஒவ்வோர் ஆண்டும் நக்ராண்மைக் கழக ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. இப்பாராட்டு விழா கடந்த 16-5-2013 –ஆம் நாள் பினாங்கு நகராண்மைக் கழக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்குப் பினாங்கு நகராண்மை கழகத் தலைவர் டத்தோ ஹஜ்ஜா பத்தாஹியா சிறப்பு விருந்தினராக வருகையளித்துச் சிறப்புரை வழங்கினார். நகராண்மைக் கழக ஊழியர்கள் கடுமையாகவும், பொறுப்பாகவும் தங்களின் பணிகளை மேற்கொள்வதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தம் உரையில் தெரிவித்தார். இப்பாராட்டு விழாவில் 53 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அங்கீகாராம் வழங்கப்பட்டது. இதில் 29 ஊழியர்களுக்குக் காட்டாய ஓய்வூதியமும், 18 ஊழியர்கள் சொந்த விருப்பத்திற்கிணங்கவும், 5 ஊழியர்கள் மரணம் எய்தியதற்காகவும் வழங்கப்பட்டது. மரணம் எய்திய ஊழியர்களின் சார்பில் அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகள் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், நகராண்மைக் கழகத்தினர் 205 ஊழியர்களுக்கும் சிறந்த சேவையாளர் என்ற கெளரவ விருதை வழங்கி சிறப்பித்தனர். இந்த அங்கீகாரம் கடந்த 2012 ஆம் ஆண்டில் சிறப்புச் சேவையைப் புரிந்த ஊழியர்களுக்குச் சன்மானம் வழங்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. இந்த விருது ஊழியர்களுக்குப் பாராட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. சிறந்த சேவையாளர் என்ற பட்டத்தைப் பெற்றவர்களுக்கு விருது மற்றும் ரிம 1000 வழங்கப்பட்டது. அதோடு விருது பெற்றவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் மாநாடு, கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தொழில் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
நகராண்மைக் கழக உதவி அமலாக்க அதிகாரி ரிஷிகேஸ் த/பெ கண்ணன் அவர்களுக்குச் சிறந்த சேவையாளர் என்ற விருது வழங்கப்பட்டது. தன் 10 ஆண்டு கால உழைப்பிற்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என அக மகிழக் கூறினார். மேலும், 16 ஆண்டு காலமாக நகராண்மைக் கழகத்தில் பொது ஊழியராகப் பணிப்புரிந்த நடேசன் த/பெ மாரிமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்த காரணத்தால் விருதை அவரின் துணைவியார் திருமதி சுசிலா பெற்றுக் கொண்டார். திருமதி சுசிலாவின் தந்தையும் சகோதரரும் முன்னால் பினாங்கு மாநில நகராண்மைக் கழக ஊழியர் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறினார்.

கணேசன் த/பெ கோபாலகிருஷ்ணன் அவர்கள் கால்நடை உதவியாளராகப் பணிப்புரிந்துள்ளார். இவர் 31 ஆண்டு காலமாகச் சிறந்த சேவை வழங்கியுள்ளார். இருப்பினும் நீரிழிவு நோய் காரணத்தால் சொந்த விருப்பத்திற்கிணங்க ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார். கடந்த 2009 –ஆண்டு சிறந்த சேவையாளருக்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குத் தம் மனமார்ந்த நன்றியினை நல்கியதோடு இனி வருங்காலங்களில் இறைவனின் திருவருளால் நலமுடன் வாழ வாழ்த்தினார். அதோடு சிறந்த சேவையாளருக்கான விருதைப் பெற்ற ஊழியர்களுக்குத் தம் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டதோடு பினாங்கு வாழ் மக்கள் சிறப்பாக வாழ்வதற்குத் தொடர்ந்து தலைச்சிறந்த சேவை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.