புக்கிட் மெர்தாஜாம்- மாநில முதல்சர் மேதகு சாவ் கொன் யாவ் நிறைவுப்பெற்ற மெங்குவாங் அணை விரிவாக்க மேம்பாட்டுப் பணியை முன்னிட்டு இத்தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மாநில முதல்வர் இந்த ஆணையின் நீர் விநியோகம் செயல்பாட்டினை நிர்வக்கிக்கும் பொருட்டு பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை இயக்குநர் டத்தோ ஜசானி மைடின்சா அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
மெங்குவாங் அணை விரிவாக்க மேம்பாட்டுப் பணி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கூட்டரசு அரசாங்கத்தின் ரிம1.2 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிரிவு 1, பிரிவு2ஏ, பிரிவு 2பி மற்றும் பிரிவு 2சி ஆகிய நான்கு பிரிவுகளின் அடிப்படையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
தற்போது பிரிவு 1 மற்றும் பிரிவு2ஏ மேம்பாட்டுப்பணிகள் மட்டுமே நிறைவுப்பெற்றன.
“எனவே, கூட்டரசு அரசாங்கம் உறுதி அளித்தது போல பிற இரண்டு பிரிவுகளும் (பிரிவு 2பி மற்றும் பிரிவு 2சி) மேம்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் கூடுதலான நீர் சேகரிக்கப்பட்டு வரட்சி காலத்தின் போது பயன்படுத்த துணைபுரியும்,” என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கின் மிகப் பெரிய அணையான மெங்குவாங் அணை 1.74கி.மீட்டர் அதிகபட்ச பரப்பளவுவிலிருந்து(1985)3.4 கி.மீட்டர் பரப்பளவில் மேம்பாட்டுக் கண்டுள்ளது. இந்த அணையின் நீர் சேகரிப்புத் திறன் 295 விழுக்காடு மேம்படுத்தப்பட்டது, அதாவது 22.0பில்லியன் லீட்டர் நீர் அளவிலிருந்து 86.4பில்லியன் லீட்டர் நீர் கூடுதலாக மேம்பாட்டுக் கண்டுள்ளது.
மாநில செயலாளர் டத்தோ அப்துல் இராக், ஆட்சிக்குழு உறுப்பினர்களான, சொங் எங், நோர்லேலா அஃரிபின், சாய்ரில் கீர் ஜொஹரி; பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை இயக்குநர் டத்தோ ஜசானி மைடின்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், விரிவாக்கப்பட்ட மெங்குவாங் அணை மெங்குவாங் பம்ப் நீர் சேமிப்பு திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது வறண்ட காலங்களில் பினாங்கு மாநிலத்திற்கான ஒரு பிரதான இருப்பாகத் திகழ்கிறது என ஜசானி கூறினார்.
“ஆயர் ஈத்தாம் மற்றும் தெலுக் பஹாங் அணைகள் அருகிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீரை சேமித்து வைக்கிறது. ஆனால் மெங்குவாங் அணை மழைக்காலத்தில் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் மூல நீரை சேமிக்கும் வல்லமை கொண்டது.
“இந்த மூல நீரை வரட்சி காலங்களில் அணையில் இருந்து விடுவித்து சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்.ஆர்.ஏ) பயன்படுத்த விநியோகிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.