பினாங்கு நீர் விநியோக வாரியம் 48 மணி நேரத்திற்குள் நீர் விநியோகமின்றி சிரமப்பட்டு வந்த ஓர் ஏழை முதியவருக்கும் உதவிக்கரம் நீட்டியது. 79 வயது நிரம்பிய லிம் சிங் சுயேன் என்ற ஏழை முதியவர் கடந்த 25 ஆண்டு காலமாக கிணற்று தண்ணீரைப் பயன்படுத்தி தன்னுடைய அன்றாட தேவைகளைப் பூர்த்திச் செய்துள்ளார். பினாங்கு நீர் விநியோக வாரியத்திற்கு முறையாக கடிதம் அல்லது முறையீடு செய்யத் தெரியாததால் நீர் விநியோகம் கிடைக்கப்பெறவில்லை என்றார் முதியவர் லிம். இம்முதியவர் எதிர்நோக்கும் துன்பங்களைச் சித்தரித்த “தி ரக்யாட் போஸ்” என்ற இணையத்தள செய்தியின் மூலம் பினாங்கு நீர் விநியோக வாரியத்திற்குத் தகவல் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது .
48 மணி நேரத்திற்குள் திரு லிம் என்ற முதியவர் வீட்டில் பினாங்கு நீர் விநியோக வாரிய துணை வாயில் மூலம் ஓர் இலவச குழாய் இணைப்பு, வீட்டின் முன்புறம் குழாய் இணைப்பு, மற்றும் மாதத்திற்கு முதல் 30,000 லிட்டர் நீர் இலவசமாகப் பெறப்படும் என அறிவித்தார் பினாங்கு நீர் விநியோக வாரியத் தலைமை நிர்வாகி பொறியியலாளர் ஜாசானி மைடின்சா. இந்த நூற்றாண்டின் கால் இறுதியில் முதல் முறையாக குழாய் நீர் பெற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார் முதியவர் லிம். “ஏழை மக்கள் மேம்பாட்டுத் திட்டம்” (Program Pembangunan Rakyat Termiskin) மூலம் முதியவர் லிம் அவருக்கு உதவிக்கரம் நீட்டுவதாக உறுதியளித்தார் ஜாசானி மைடின்சா. இத்திட்டமானது பினாங்கு நீர் வாரியத்தின் கீழ் இயங்குவதாகவும் பினாங்கு வாழ் ஏழை மக்களுக்கு உதகிறது எனவும் குறிப்பிட்டார்.