ஜார்ச்டவுன் – பினாங்கு பசுமைக் கவுன்சில் (PGC), L’Occitane Malaysia உடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஆறாவது முறையாக பினாங்கு பசுமைச் சந்தை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.
இந்த நிகழ்ச்சி வருகின்ற மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கேர்னி பிளாசாவிலும், ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் 1st Avenue பேரங்காடியிலும் நடைபெற உள்ளது.
பினாங்கு பசுமைச் சந்தை உள்ளூர் மக்கள், தொழில்முனைவோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான நடைமுறைகளை ஆதரிக்கும் தளமாக செயல்படுகிறது என மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கூறினார்.
“பினாங்கு பசுமைச் சந்தையானது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் நமது சமூகம் ஆற்ற வேண்டிய கடமையை நன்கு சித்தரிக்கும்.
“இஇந்நிகழ்ச்சியை செயல்படுத்துவதில் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களுக்குப் பாராட்டுத் தெரித்துக் கொள்கிறோம். மேலும், இது சமூக ஈடுபாட்டையும் வலியுறுத்துகிறது.
“இந்நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்வதில் இணக்கம் கொண்டுள்ளோம்,” என்று அவர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பண்டிகை சூழலை உருவாக்கும் நோக்கத்தில், வருகின்ற ஜூன் 22-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘மாற்றத்தின் மெல்லிசை பாடல்’ என்ற தலைப்பில் பாடல் எழுதும் போட்டியை PGC நடத்தவுள்ளது.
PGC பொது மேலாளர் ஜோசப்பின் டான் இந்த நிகழ்ச்சியில் L’Occitane Malaysia பங்கேற்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“இந்தச் சந்தையில் வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் பாங்கானப் பொருட்கள், அத்துடன் தாவரங்கள் மற்றும் நகர்ப்புற விவசாயம் பற்றிய காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும்.
“பொதுமக்கள் தங்கள் சொந்த கொள்கலன்கள் மற்றும் ஷாப்பிங்கிற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் 30க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டிக்கான பதிவு மற்றும் சமர்ப்பிப்பிக்கும் நாள் வருகின்ற ஏப்ரல் 23 முதல் மே 25 வரை திறந்திருக்கும். வெற்றியாளர்கள் ரிம8,000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி உலக புவி தினத்தை முன்னிட்டு ஒரு மில்லியன் மரங்களை நடவு செய்யும் பணியை மாநில அரசு மேற்கொள்ளும் என்று சுந்தராஜூ கூறினார்.
“எனவே, அன்றைய தினம் சுமார் 150,000 மரங்களை எனது பிறை தொகுதியில் நடுவதற்கு விரும்புகிறோம்,” என்றார்.