செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் ஹோட்டலில் நடைபெற்ற பினாங்கு பசுமைப் பள்ளி விருது விழாவின் போது, தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பசுமை திட்டங்கள்ளுக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன.
பசுமைப் பள்ளி விருதுக்கான முதன்மை வெற்றியாளராக
பாயான் பாரு தேசியப்பள்ளி ரொக்கம் ரிம5,000 மற்றும் சான்றிதழ் பெற்றுக் கொண்டனர். இரண்டாவது இடத்தை யோக் எங் சீனப்பள்ளி ரிம3,000 ரொக்கப்பணத்துடன் நற்சான்றிதழ் பெற்றுக் கொண்டது.
இடைநிலைப்பள்ளிக்கான பிரிவைப் பொறுத்தவரை, பட்டர்வொர்த் கான்வென்ட் இடைநிலைப்பள்ளி முதலிடத்தையும், டத்தோ ஹாஜி முகமட் நோர் அமாட் இரண்டாம் இடத்தையும் பெற்றன.
பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனை உலகளவில் தலைப்புச் செய்தியாக இடம்பெறும் வேளையில், பசுமைப் பள்ளி விருது போன்ற திட்டங்கள் சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வை மேலோங்க துணைபுரிகிறது என இவ்விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
“இன்றைய இளைஞர்களிடையே இந்த விழிப்புணர்வை மேலோங்கச் செய்வதற்கு இதனை பள்ளிகளில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். எனவே, இவ்விருதளிப்பு விழா சிறந்த தளமாக அமைகிறது.
“தற்போது உலகளாவிய நிலையில் எதிர்நோக்கும் பருவநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொள்ள உதவக்கூடிய இரண்டு மிக முக்கியமான குழுக்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடன்பெறுகின்றனர்.
பினாங்கு பசுமைக் கவுன்சில் (PGC) இம்மாநிலத்தில் பசுமை முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய இயந்திரமாக செயல்படுகிறது.
“தூய்மையான மற்றும் பசுமையான பினாங்கு மாநிலத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்குப் பொறுப்பு மிக்க குடிமக்களை உருவாக்குவதே எங்களின் கடமையாகும்,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.
பினாங்கு அரசாங்கத்தால் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு பசுமைப் பள்ளி விருதுகள் நடத்தப்படுகிறது.
தற்போது 14வது ஆண்டாக நடத்தப்படும் இவ்விழாவானது பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரண்டு ஊராட்சி மன்றங்களுடனும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் சமூகத்தில் சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வை வளர்ப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தை கற்பிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகத் திகழ்கிறது.
இதற்கிடையில், பினாங்கு பசுமை ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் சிறந்த பங்களிப்பு நல்கிய 15 பாலர் பள்ளிகளுக்கு தலா ரிம500 ஊக்கத்தொகையும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
இது போல், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் டோரே மறுசுழற்சி போட்டி 2023 &+ (AND PLUS)
போட்டியின் கீழும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
டோரே தொழில்துறை, இன்க் (மலேசியா), PGC உடன் இணைந்து, இந்த போட்டி PET பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பதாகும், இது ஜவுளித் தொழிலில் பயன்படுத்த செயற்கை ‘fibres’ ஆக மறுசுழற்சி செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் மற்றும் PGC பொது மேலாளர் ஜோசபின் டான் மெய் லிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.