ஜாவி – பினாங்கு மாநில அரசாங்கம் பத்து காவானுக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியைச் சுற்றி ஒரு ‘விளையாட்டு நகரத்தை’ உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், ஏப்ரல் மாதம் வரை தனது நிர்வாகம், மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ‘விளையாட்டு நகரத்தை’ உருவாக்கும் திட்டத்திற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) சமர்ப்பிக்க பல்வேறு தரப்பினரை அழைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். மேலும், விளையாட்டுத் துறையில் பினாங்கு மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல இணக்கம் கொண்டுள்ளதாகக் கூறினார்.
நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், இன்று நிபோங் திபால் அரங்கின் திறப்பு விழாவை முடித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் கூறினார்.
மாநில அரசாங்கம், பத்து காவானில் ‘விளையாட்டு நகரத்தை’ உருவாக்க திறந்த குத்தகை முறையில் விண்ணப்பிக்க கோரியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பத்து காவான் அரங்கம்,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு பந்தயப் பாதை, நீச்சல் குளம், விளையாட்டு அகாடமி உள்ளிட்ட பிற வசதிகளும் இடம்பெறும். மேலும், வணிகம் சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என்றும் விளக்கமளித்தார்.
பினாங்கு மாநில அரசாங்கம் தீவுக்கும் பெருநிலத்திற்கும் இடையிலான சமநிலையான வளர்ச்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.
“பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான மையமாக உருவாகுவதற்கு அதிக ஆற்றலைக் கொண்ட ஒரு பகுதியாகத் திகழும் பெருநிலத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூர் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தற்போது உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
“இம்மாநிலத்தின் பெருநிலத்தில்
பட்டர்வொர்த் அரேனா, செபராங் பிறை அரேனா தற்போது நிபோங் திபால் அரேனா அமைக்கப்பட்டு பெருநிலம் துரித வளர்ச்சி அடைந்து வருவதைக் காண முடிகிறது.
“நிபோங் திபால் அரேனாவில் பூப்பந்து மைதானம் மட்டுமின்றி தற்போது வளர்ச்சி அடைந்து வரும் ‘pickle ball’ விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தைப் பயன்படுத்தி மாநிலம், தேசிய மற்றும் அனைத்துலக ரீதியிலான தரம் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்க இணக்கம் கொள்ள வேண்டும்,” என்றார்
முன்னதாக தனது தொடக்க உரையில், புதிய விளையாட்டான ‘pickle ball’
அனைத்துலக ரீதியில் ஆர்வத்தை அதிகரித்து வருவதால், பினாங்கு அரஙகம் மற்றும் திறந்தவெளி கழகம் (PSDKLPP) நிபோங் திபால் அரேனாவில் உள்ளதைப் போல அதிகமான மைதானங்களை உருவாக்க உத்வேகம் கொள்ள வேண்டும் என்று சாவ் பரிந்துரைத்தார்.
இத்திட்டம் மாநில அரசாங்கத்தின் 1.808 ஏக்கர் நிலப்பரப்பில் ரிம10 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினருமான
ஜேசன் ஹெங் மூய் லாய்,
இந்த அரங்கத்தில் ஆறு பிரதான பூப்பந்து மைதானங்கள் கொண்டுள்ளன. அதோடு, இந்த அரங்கம் சமூக நிகழ்ச்சிகள் ஏற்று நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஜாவி மாநில சட்டமன்றத் தொகுதி மக்களும் பயன் அடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்த அரங்கமானது பூப்பந்து மைதானமாக மட்டுமின்றி பல்நோக்கு அரங்கமாகவும் செயல்படும், என்றார்.
நிபோங் திபால் அரங்கம் பினாங்கு மாநிலத்திற்கு குறிப்பாக செபராங் பிறை தெற்கு மாவட்ட முன்னேற்றத்தின்
மற்றொரு அடையாளமாகத் திகழ்கிறது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூ ஜி சென்; மாநில செயலாளர், டத்தோ ‘சுல்கிஃப்லி லாங்; தெற்கு செபராங் பிறை மாவட்ட அதிகாரி, முகமட். கைருல் ஃபட்ஸ்லி ரோஸ்லி
மற்றும் பினாங்கு அரங்கம் மற்றும்
பினாங்கு மைதானம் மற்றும் திறந்தவெளி கழகம் (PSDKLPP)
தலைமை நிர்வாக அதிகாரி ரஷிதா ஜலாலுதீன் ஆகியோரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.