ஜார்ச்டவுன் – வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு ஏறக்குறைய 2,000 வியாபாரிகள் பினாங்கு மாநகர் கழகத்தைத் (எம்.பி.பி.பி) தொடர்புக் கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில் இதுவரை உரிமம் பெற்ற 5,841 வியாபாரிகள் மாநகர் கழகத்தை தொடர்புக் கொண்டதாகக் கூறினார்.
“மாநகர் கழகம் உரிமம் பெற்ற வியாபாரிகளில் விபரங்களைச் சேகரித்து வருகிறது.
” உரிமம் பெற்ற 6,957 வியாபாரிகளில் இதுவரை 5,841 அல்லது 84 சதவீதம் பேர்கள் தங்கள் வங்கி கணக்கு தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
“இதற்கிடையில், புலனம் வாயிலாக பெறப்பட்ட 1.105 வியாபாரிகளின் தகவல்கள் எம்.பி.பி.பி உரிமத் தரவுத்தளத்தின் மூலம் மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளன,” என இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மாநில அரசு பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தில் ரிம7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து, அதில் 14,012 சிறுதொழில் வியாபாரிகள் பயனளிக்கும் வகையில் உரிமம் பெற்ற ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் ரிம500 உதவித்தொகையாக வழங்கும்.
இந்த ரிம7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ரிம6,640,500 இரு ஊராட்சி மன்றங்களில் உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு வழங்கப்படும், அதேவேளையில் மீதமுள்ள நிதி ‘FAMA’ ( கூட்டரசு விவசாய விநியோக வாரியம்) கீழ் பதிவுப்பெற்ற சந்தை வியாபாரிகளுக்கு வழங்கப்படும்.
வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் உரிமம் பெற்ற சிறுதொழில் வியாபாரிகளின் தகவல்கள் உறுதிச் செய்தவுடன் மின்னணு நிதி பரிமாற்றம் (EFT) மூலம் அவர்களின் வங்கி கணக்குகளில் ரிம500-கான நிதித்தொகை வழங்கப்படும், என்றார்.
மேல் விபரங்களுக்கு, எம்.பி.பி.பி-ஐ 04 – 263 7000 (24 மணிநேரம்) மற்றும் எம்.பி.எஸ்.பி- ஐ 1-800-88-6777 (கட்டணமில்லா 24 மணிநேர தொடர்பு) அல்லது 04- 269 6969 (வார நாட்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5:30 மணி வரை) அழைக்கலாம்.
இரு ஊராட்சி மன்ற தொழிலாளர்களில் 4,791 பேர்கள் கோவிட்-19 சிறப்புப் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெரிவித்தார்.
முன் வரிசை பணியாளர்களின் சேவைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மாநில அரசு ரிம1.4 மில்லியன் நிதி ஒதுக்கி ஒவ்வொருவருக்கும் ரிம300-ஐ சிறப்பு நிதியுதவியாக வழங்கும்.