பினாங்கு மாநில அரசு அண்மையில் அறிவித்த பினாங்கு மக்கள் உதவித்திட்டம் 3.0 இன் கீழ் அழகு நிலையங்கள் மற்றும் SPA மற்றும் இயற்கை பாத அழுத்த மையம் & ‘Bekam’ மையம் உரிமையாளர்களுக்கு ரிம500 நிதியுதவி வழங்கப்படும்.
மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இலக்கு குழுக்களுக்கு உதவவும், ஜனவரி 13 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி2.0) அமலாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் ரிம20 மில்லியன் நிதியை ஒதுக்கீட்டுள்ளது.
எனவே, முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினர் செபராங் பிறை மற்றும் தீவுப்பகுதியில் செயல்படும் பல சிகை அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்களை அணுகினர்.
“மாநில அரசு வழங்கும் ரிம500 உதவித்தொகை வரவேற்கத்தக்கது. இந்த உதவித்தொகை ஊராட்சி மன்றங்களில் பதிவுப்பெற்ற வணிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வேளையில், பதிவுப்பெறாத கடை வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கும் மாநில அரசு உதவி வழங்க உத்தேசிக்க வேண்டும்,” என ஜிஹான் சிகை அலங்கார அகாடமி உரிமையாளர் ஜிஹான் ஸ்ரீ, 41 தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மாத கடை அடைப்பு அதன் வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் செலுத்த சிறு தொழில் வியாபாரிகள் மிகுந்த சவால்களை எதிர்நோக்குவதாக, வட மாநில சிகை அலங்கார சங்கத் தலைவருமான ஜிஹான் கூறினார்.
“வாடகை தள்ளுபடி அல்லது வாடகை விலக்கு குறித்து மாநில அரசு உத்தேசிக்க வேண்டும், என்றார்.
கடந்த 13 ஆண்டுகளாக அழகு நிலையத்தை நடத்தி வரும் வி.மலர்விழி,36 இந்த பி.கே.பி2.0 அமலாக்கம் தனது வியாபாரத்தில் மிகுந்த நஷ்ட்டத்தை விளைவிப்பதாகக் கூறினார்.
மாநில அரசு அறிவித்திருக்கும் இந்த ரிம500-கான உதவித்தொகை திட்டம் வரவேற்கத்தக்கது. இத்தொகை சிறிதாக இருந்தாலும் தற்போதைய சூழலை எதிர்கொள்ள குறிப்பாக வாடகை செலுத்த பேருதவியாக இருக்கும்,என்றார்.
இந்த பி.கே.பி2.0 அமலாக்கத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்த கூட்டரசு அரசாங்கம் எங்களை போன்ற சிறு தொழில் வியாபாரிகளின் நலனிலும் அக்கரை செலுத்த வேண்டும்.
பிற துறைகளைப் போல அழகு நிலையங்கள், முடித் திருத்தும் நிலையங்கள் போன்ற தினசரி வருமானத்தைக் கொண்டு பயனிக்கும் சிறு தொழில் வியாபாரிகளும் கடைத் திறந்து செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
எங்கள் துறைகள் சார்ந்த கோவிட்-19 கிளாஸ்டர்கள் குறைவாகவே பதிவாகி இருக்கும் வேளையில் அதன் வியாபார செயல்பாடு குறித்து கூட்டரசு அரசு உத்தேசிக்க வேண்டும், என உதயமலர் அழகு நிலைய உரிமையாளருமான மலர்விழி கேட்டுக்கொண்டார்.