புக்கிட் டும்பார் – இன்று அனுசரிக்கப்படும் உலக நீர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு வாழ் மக்கள் உள்நாட்டு நீர்ப் பயன்பாட்டை மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அண்மையில் சில விபத்துகளால் ஏற்பட்ட நீர்த் தடையை நினைவில் கொண்டு அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்த பொது மக்கள் இணக்கம் கொள்ள வேண்டும் என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில அளவிலான உலக நீர் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
“பினாங்கில் தனிநபர் உள்நாட்டு நீர்ப் பயன்பாடு ஒருநாளைக்கு சராசரி தேசியப் பயன்பாடு 237
லிட்டர்/கபிதா/நாள் (LCD)
உடன் ஒப்பிடுகையில் 248
லிட்டர்/கபிதா/நாள் (LCD)
என பதிவுச் செய்கிறது.
“2024 ஆண்டில் 10% உள்நாட்டு நீர்ப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் இலக்கினை அடைய அனைவரும் தினசரி பயன்பாட்டை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
“பொதுவாகவே பினாங்கு மக்கள் மின்சாரம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் காட்டும் அக்கறையை நீர்ப் பயன்பாட்டில் காட்டுவது மிகக் குறைவாகும்.
ஏனெனில், மின்சாரம் மற்றும் எண்ணெய் விலையைக் காடிலும் தண்ணீர் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது.
“பினாங்கின் உள்நாட்டு நீர்ப் பயனீட்டாளர்கள் நீர்ப் பயன்பாட்டில் 10 விழுக்காடு சேமிக்க முடிந்தால், மலைப் பகுதிகளில் இருக்கும் தெலுக் கும்பார், பாலிக் புலாவ் மற்றும் பிற பகுதிகளில் போதுமான நீர் விநியோகம் செய்ய முடியும்,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.
பினாங்கு மாநிலத்தில் லிட்டர்/கபிதா/நாள் (LCD) மிக அதிகமாக இருப்பதை உணர்ந்து, மாநில அரசு PBAPP மூலம் நீர் தற்செயல் திட்டம் 2030 (WCP 2030) செயல்படுத்துகிறது. இதன் கீழ் எட்டு திட்டங்களைச் செயல்படுத்த சுமார் ரிம1.184 பில்லியன் முதலீடுச் செய்கிறது, என கொன் இயோவ் கூறினார்.
மேலும், பினாங்கில் உள்நாட்டு நீர் விநியோகத்தைக் குறைக்கக் கூடிய நீர் மறுசுழற்சி முறையை அனைத்துத் தொழில்துறைகளும் அமல்படுத்த வேண்டும் என்றும் கொன் இயோவ் பரிந்துரைத்தார்.
PBAPP இன் தலைமை நிர்வாக அதிகாரி, Ir.பத்மநாதன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் (SPAN), சார்லஸ் அந்தோனி சந்தியாகோ அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.