பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் சிங்க முகக் காளியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியது. அவ்வகையில் இத்திருவிழா கடந்த 25-2-2013-ஆம் திகதியன்று சிறப்பான வகையில் நடைபெற்றது. மாசி மகத் தெப்பத் திருவிழா நாடு தழுவிய நிலையில் புகழ்ப்பெற்று விளங்குவதால் அன்றைய தினம் ஏறக்குறைய 50 ஆயிரம் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
1971-ஆம் ஆண்டு காளியம்மன் விக்ரகத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு அரசாங்க விசைப்படகு பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இரு படகுகளை இணைத்து முழுமையான தெப்பமாக உருவாக்கி இன்றைய காலக்கட்டத்தில் நாடுத் தழுவிய நிலையில் இத்தெப்பத் திருவிழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுப் புறத் தூய்மைக்கு முக்கியத்தும் வழங்கும் வண்ணம் ரசாயனக் கலப்பு இல்லாத நெகிழியைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மிதவை ஒளித் தீபம் அவரவர் வேண்டுதலுக்கிணங்கப் பக்தர்களால் கடலில் விடப்பட்டது.
சிங்க முகக் காளியம்மனின் விக்ரகத்தைச் சுமந்து கடலில் ஊர்வலம் வரத் தயாராக இருக்கும் ஒளி பொருந்திய தெப்பம்.
இத்திருவிழா அன்று அதிகாலை தொடங்கி 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடற்கரையிலிருந்து சிங்க முகக் காளியம்மன் ஆலயத்திற்குப் பால் குடத்தை ஏந்திய வண்ணம் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். மதிய வேளையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஊர்வலம் நடைபெற மக்கள் சிங்க முகக் காளியம்மனின் திருவருளைப் பெறும் பொருட்டு தங்கள் எண்ணங்கள் நிறைவேற மனமுருகி வேண்டி மிதவை விளக்குகளைக் கடலில் விட்டனர்.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலைமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி ஐந்தாம் முறையாக இவ்விழாவில் கலந்து கொண்டதோடு நிதியுதவியும் வழங்கி பக்தர்களைப் பேரின்பத்தில் ஆழ்த்தினார்.. ஆலயத் தலைவர் ஆ. சராஜீவம், இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு எம்.எஸ்.இராஜன், ஆலயச் செயலவை உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர்கள் ஒன்றாகச் செயல்பட்டு இத்திருவிழா கோலாகலமாக நடந்து முடிய துணைபுரிந்தனர்.
மழையையும் பொருட்படத்தாது சூழ்ந்த மக்கள் கூட்டம்