பினாங்கு மாநகர் மேயராக டத்தோ இராஜேந்திரன் அந்தோணி நியமனம்.

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) செயலாளர் டத்தோ இராஜேந்திரன் அந்தோணி பினாங்கு மாநகர் கழக மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியாவிலே மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் பதிவு செய்கிறார்.

வருகின்ற மே,5ஆம் தேதி பதவி ஓய்வு பெறும் டத்தோ இயூ துங் சியாங்கிற்குப் பதிலாக அவர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

மாநில வீட்டுவசதி, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ, நேற்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அறிவித்தார்.

இராஜேந்திரனின் பதவியேற்பு விழா வருகின்ற மே,5-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும், என்றார்.

“டத்தோ இயூவின் எதிர்காலத் திட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

“இருப்பினும், அடுத்த புதிய மேயராகப்
பதவியேற்கும் டத்தோ இராஜேந்திரன் எம்.பி.பி.பி வளர்ச்சியை முன்னிறுத்தி பினாங்கின் கொள்கையை நிலைநாட்ட தொடர்ந்து பணியாற்ற முற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“பினாங்கு மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப புதிய மேயரின் முயற்சிகளுக்கு கவுன்சிலர்களும் ஏஜென்சிகளும் நல்ஆதரவு வழங்குவர்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இராஜேந்திரன் 37 வருடங்களாக எம்.பி.பி.பி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார், அதன் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர். மேலும், தீவுப் பகுதியில் பல திட்டங்கள் மற்றும் சாலை அமைப்புகளை மறுவடிவமைப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு தீவில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என
செய்தியாளர்களிடம் பேசிய இராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும், பொது மக்களிடையே சமூகப் பங்கேற்பையும் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

“நான் பல சவால்களை எதிர்கொள்வேன் என்று எனக்குத் தெரியும். இருப்பினும், என்னால் முடிந்ததைச் செய்து பினாங்கு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்,” என்றார்

பினாங்கின் நான்காவது மேயராகப் பதவியேற்க வாய்ப்பு வழங்கிய பினாங்கு அரசாங்கத்திற்கும், குறிப்பாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.