இந்தியர்களுக்குக் கல்வி, சமயம் என்ற கோணத்தில் மட்டும் உதவிக் கரம் நீட்டாமல் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்குக் கூடுதலான வேலை வாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக மேலோங்கிக் காணப்படுகிறது. இந்த பிரச்சனைக்குச் செவி சாய்க்கும் வகையில் இரண்டாம் துணை முதல்வர் இந்தியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
எனவே, நகராண்மைக் கழகம், பினாங்கு ஹில் கார்ப்பரேசன் மற்றும் இதர மாநில அரசாங்க கழகங்களிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப் போகுவதாகக் கூறினார். பினாங்கு மக்கள் கூட்டணி அரசு அதிகமான அந்நிய முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறது. மக்கள் கூட்டணி அரசின் வெளிப்படையான அணுகுமுறை மற்றும் ஊழலின்மை ஆகிய நிலைபாட்டினால் அந்நிய முதலீட்டாளர்கள் கவரப்படுகின்றனர் என்று ஃபிரி மலேசிய டூடேவிற்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
மேலும் முதலீட்டாளர்களின் வருகையினால் பினாங்கு மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் இந்தியர்களும் பயனடைவதோடு பினாங்கு மாநிலத்தின் பொருளாதாரமும் மேன்மையடையும் எனத் தெரிவித்தார்.
நகராண்மைக் கழகம் மற்றும் அரசு சார்பு இயக்கங்களும் குத்தகையாளர்களுக்குப் பதிலாக தங்களின் நேரடிப் பார்வையில் தொழிலாளர்களைப் பணி நிமித்தம் செய்யவே விரும்புகின்றனர். ஊழியர்கள் நேரடியாக நியமிக்கும் பொழுது குத்தகையாளர்களின் தலையீட்டைத் தகர்ப்பதோடு வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறையும். இதன் மூலம் இந்நாட்டு மக்களுக்குக் கூடுதலான வேலை வாய்ப்புகள் குறிப்பாக இந்தியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மக்கள் கூட்டணி ஆட்சியில் திறந்த விலை ஒப்பந்தம் என்பது உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. எனவே இம்மாநிலத்தில் இந்தியர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளும் அரசாங்க திறந்த விலை ஒப்பந்தங்களும் வழங்கப்படும் என்றார். மக்கள் கூட்டணி அரசு வெளிப்படையான அரசாங்கக் கொள்கையையும் வெளிப்படையான திறந்த விலை ஒப்பந்த முறையையும் பின்பற்றுவதால் தான் இது சாத்தியப்படுகிறது.