ஜெலுத்தோங் – அண்மையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையமும் அத்தொகுதியின் கம்போங் நிர்வாக செயல்முறை கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்கியது. சுங்கை பினாங்கு, டத்தோ கெராமாட், பத்து லஞ்சாங் என மூன்று சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்களுக்கு இப்பற்றுச்சீட்டினை வீடமைப்பு, ஊராட்சி மன்றம், கிராமப்புற & நகர்ப்புற நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயரும் எடுத்து வழங்கினர்.
இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 வசதி குறைந்த குடும்பத்தை சார்ந்த ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டது. மேலும், நிகழ்வில் சிறப்புரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களால் அவதியுறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இவ்வுதவி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், பள்ளி மாணவர்கள் பெற்றோர்களின் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் இப்பற்றுச்சீட்டுக் கொண்டு பள்ளிச் சீருடைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரிம30 மதிக்கத்தக்க பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்நிதியம் அனைத்தும் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் அவர்களின் நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது.