பந்தாய் ஜெரஜாக் – மாநில அரசு மலேசியா சுகாதார அமைச்சு (MOH) பினாங்கு மாநிலத்திற்குப் பிரத்தியேகமாக அங்கீகரித்த 200,000 மருந்தளவு தடுப்பூசிகளின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது.
தற்போது முதல் ஏற்றுமதியில் பெறப்பட்ட 43,120 மருந்தளவு தடுப்பூசிகள் மாநிலம் முழுவதும் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.
“பினாங்கு வாழ் அனைத்து மக்களும், குறிப்பாக பெரியவர்களுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதி செய்வதில் மாநில அரசு எப்போதும் கடப்பாடு கொண்டுள்ளது.
“பொது மக்களுக்கு விரைவில் முழுமையான தடுப்பூசி போடுவது அவசியம். ஏனென்றால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாப்பை உறுதிசெய்யும்.
மேலும், கூடுதல் தடுப்பூசி விநியோகத்தின் மூலம் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் (பி.பி.வி) முழுமையாக செயல்பட முடியும்,” என்று முதல்வர் இங்குள்ள பாயான் பாரு சுகாதார மருத்துவமனைக்குத் தடுப்பூசி விநியோகத்தை நேரில் சென்று பார்வையிட்டப்பின் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை தொழில்நுட்பம் & உணவு பாதுகாப்பு, புறநகர் வளர்ச்சி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர். நோர்லெலா அரிஃபின்; மாநில சுகாதார இயக்குனர் (பொது சுகாதாரம்) பினாங்கு மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்), டாக்டர். மரோஃப் சுடின் மற்றும் மாநில சுகாதார துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) ஜே.கே.என், டாக்டர். ரஃபிடா நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் கூற்றுப்படி, பினாங்கு மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களில் 60 விழுக்காடு பெரியவர்கள் முழுமையான தடுப்பூசிகளைப் (இரண்டு மருந்தளவு) பதிவு செய்வர்.
தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்ட (PICK) இலக்கை அடையும் பொருட்டு இந்த செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி போட பதிவு செய்த 100 விழுக்காட்டு பெரியவர்களும் முதல் மருந்தளவு தடுப்பூசி பெறுவார்கள் மற்றும் 80 விழுக்காட்டினர் இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி பெறுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார். இத்திட்டம் அதன் இலக்கை அடைய உதவும் மலேசிய சுகாதாரத் துறை, மாநில சுகாதாரத் துறை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இன்று பெறப்பட்ட தடுப்பூசிகள் 17 தடுப்பூசி சேமிப்பு மையங்களில் வைக்கப்படும். மேலும், பாயான் பாரு சுகாதார கிளினிக்கு 3,200 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
“கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதைத் தவிர்த்து, இம்மாநிலத்தின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் கூடுதல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறை அல்லாத ஊழியர்களை வழங்க சுகாதார அமைச்சரிடம் விண்ணப்பம் செய்ததாக ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர். நோர்லெலா அரிஃபின் தெரிவித்தார்.
“வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு மரணம் ஏற்படாமல் தவிர்ப்பதே கூடுதல் ஊழியர்கள் விண்னப்பத்திற்கான குறிகோளாக அமைகிறது என விளக்கமளித்தார்.