சிலாங்கூர் மற்றும் பஹாங் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பினாங்கு மாநில அரசு ஒன்றிணைந்து செயல்படுகிறது என்று மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறினார்.
மாநில அரசு மனிதவளத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் கட்டம் கட்டமாக அனுப்பியுள்ளது.
“பினாங்கு அரசாங்கம் தேவைப்படுபவர்களுக்கு தனது உதவியைத் தொடர்ந்து வழங்கும்,” என்று முதல்வர் தனது அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒன்றிணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் முதல்வர்
தனது நன்றியை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக இந்த இக்கட்டான சூழலை கடந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“பினாங்கு மாநிலம் எல்லா வழிகளிலும் உங்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறது. நீங்கள் தனி ஆள் இல்லை,” என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது முகநூல் பதிவேட்டில் முதல்வர் இவ்வாறு பதிவு செய்தார்.
சிலாங்கூர் மற்றும் பகாங் மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பினாங்கு மாநில அரசு தனது ஊராட்சி மன்ற உதவியுடன் டிசம்பர்,20 அன்று உதவிக்கரம் நீட்டியது.
பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) ஆகிய இரண்டு ஊராட்சி மன்றங்களின் பணியாளர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சுத்தம் செய்து வருகின்றனர். இந்தப் பயணத்தில் அவர்களுடன் எம்.பி.பி.பி மேயர் டத்தோ இயூ துங் சியாங்கும் களம் இறங்கியுள்ளார்.
டத்தோ இயோ தலைமையில் எம்.பி.பி.பி சிறப்புப் பணிக் குழுவினர் கடந்த டிசம்பர்,24 அன்று பஹாங், பெந்தோங் பகுதியில் துப்புரவுச் சேவைகளை மேற்கொண்டனர்.
இயோ மற்றும் தன்னார்வலர்கள் கடந்த டிசம்பர்,19 முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று உதவி செய்து வருகின்றனர்.
எம்.பி.எஸ்.பி அவசர மேலாண்மைத் துறைத் தலைவர் முகமது ஐடில் சம்சூரி, 2017 இல் பினாங்கை தாக்கிய வெள்ளத்தை விட, அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மோசமாக இருப்பதாக, பூஞ்சோங், கம்போங் தெங்காவில் துப்புரவுப் பணி மேற்கொண்டப் பின் இவ்வாறு தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று உதவிக்கரம் நீட்டியதோடு துப்புரவுப் பணியில் பங்கேற்கவும் விரைந்தனர்.
சிலாங்கூர் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பினாங்கு மாநில தன்னார்வத் தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரைந்தபோது, வெள்ள நெருக்கடிக்கு மத்தியில் பொது மக்களிடையே மனிதாபிமானம் நிலவுவதைக் கண் கூடாகக் காண முடிகிறது.
பினாங்கு, பேராக் மற்றும் ஜோகூர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பௌத்த சூ சி மெரிட்ஸ் சங்க உறுப்பினர்கள் ஷா ஆலாமில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தாமான் ஸ்ரீ மூடாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ள முற்பட்டனர்.
இச்சங்கத்தைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக பணியில் ஈடுபட்டதாக இச்சங்கத்தின் பினாங்கு மாநில தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ கூ பூ லியோங் குறிப்பிட்டார்.