பினாங்கு மாநில அரசின் மலிவு விலை வீட்டுத் திட்டம்

images

 

 

 

 

 

 

மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான பதிவு நிகழ்ச்சியை முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் பிப்ரவரி 7-ஆம் திகதி துவக்கி வைத்தார். மலேசிய வரலாற்றிலேயே பினாங்கு மாநிலமே முதன் முறையாக 19,172 மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை வரையறுக்கவுள்ளது. மாநில அரசு முதல் கட்டமாக 1840 அலகுகளைக் கொண்ட மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளை அதாவது  தீவிலுள்ள ஜாலான் எஸ்பி செல்லையா எனும் இடத்தில் 1320 அலகுகளும் பண்டார் காசியா, பத்து காவான் பெரு நிலத்தில் 520 அலகுகளும் கட்டமைக்கவுள்ளது. மாநில அரசு இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு ரிம 500 மில்லியன் தேவைப்படுவதால் அரசாங்க நிலங்களைத் திறந்த விலை ஒப்பந்தம் மூலம் விற்கப்பட்டு அந்நிதித் திரட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு மேற்பார்வையாளராக இருந்து பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்துவதோடு மத்திய அரசின் பொது வீடமைப்பு நிறுவனத்தினால் அங்கிகரிக்கப்பட்ட மாதிரியைப் பயன்படுத்தியே இம்மலிவுவிலை வீடுகள் கட்டப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. ஜாலான் எஸ்பி செல்லையாவில் கட்டப்படும் 1320 அடுக்குமாடி வீடுகளில் 770 அலகுகள் 700 சதுர அடியும் அதன் விலை ரிம 72,500 , 303 அலகுகள் 800 சதுர அடியும் அதன் விலை   ரிம 200,00 , 165 அலகுகள் 900 சதுர அடியும் அதன் விலை ரிம 300,000, 82 அலகுகள் 1000 சதுர அடியும் அதன் விலை ரிம 400,000 ஆகும். முதல்வர்  ஜாலான் எஸ்பி செல்லையாவில் கட்டப்படும் 1320 அலகுகளில் 6.2% மட்டுமே ரிம 400,000 விலையில் கட்டப்படுகிறது என நினைவுறுத்தினார்.

பண்டார் காசியா, பத்து காவன் வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 520 அலகு அடுக்குமாடி வீடுகளில் 149 அலகுகள் 800 சதுர அடியும் அதன் விலை ரிம 72,000 , 98 அலகுகள் 900 சதுர அடியும் அதன் விலை ரிம 168,000 , 273 அலகுகள் 1000 சதுர அடியும் அதன் விலை ரிம 220,000 ஆகும்.  மேலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2013-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ரிம 72,500 முதல் ரிம 400,000 வரையிலான விலையில் நகர்ப்புறங்களிலும் ரிம 72,500 முதல் ரிம 220,000 வரையிலான விலையில் கிராமப்புறங்களிலும் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்ற அறிவிப்பைப் பின்பற்றியே பினாங்கு மேம்பாட்டு நிறுவன மேலாளர் டத்தோ ரொஸ்லி அவர்கள் இத்திட்டத்தை மேற்கொள்கிறார் என்பது வெள்ளிடை மலையாகும்..

சிங்கப்பூர்  ‘எஸ்டிபி’ பொது வீடமைப்பைக் கட்டிய சுர்பனா பன்னாட்டு நிபுணர்களே பத்து காவான் வீடமைப்பை வடிவமைப்பதற்காகப் பணி நிமித்தம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, பொது மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்கிக் கொள்வதற்கு கொம்தார், பண்டார் பெர்டா நகராண்மைக் கழக அலுவலகம், பினாங்கு மேம்பாட்டு நிறுவனம், பாயான் பாரு ஆகிய இடங்களில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்திற்கானப் பதிவுப் பாரத்தைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டத்திற்கானப் பதிவு 7 பிப்ரவரி முதல் 7 மார்ச் வரை காலை மணி 9.00 முதல்  மதியம் மணி 5.00 வரை இடம்பெறும். பொது மக்கள் அவ்விடங்களுக்குச் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

மாதாந்திர வருமானமாக ரிம 3,500-ஐ பெறும் குடும்ப உறுப்பினர்கள் குறைந்த நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகளையும் மாதாந்திர வருமானமாக ரிம 3,500-க்கு மேல் பெறும் குடும்ப உறுப்பினர்கள் மலிவு அடுக்குமாடி வீடுகளையும் வாங்கலாம் என முதல்வர் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். இத்தொடக்க விழாவில் கலந்து கொண்ட திரு விஸ்வநாதன், 46 இத்திட்டத்தின் வாயிலாகத் தான்  சொந்த வீடு வாங்க முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளார். சொந்த தொழில் செய்யும் இவர் மாதாந்திர வருமானமாக ரிம 2000 மட்டுமே பெறுவதால் இத்திட்டத்தின் மூலம் தனது மனை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறும் என எதிர்ப்பார்க்கிறார். மேலும் மாநில அரசின்  இந்தத் திட்டத்தை மனதார வரவேற்ற பழனிநாதன், 49 பொருளாதாரத்தில்  பின்தங்கியிருக்கும் பினாங்கு வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மக்கள் கூட்டணி அரசின் முயற்சியையும் செயற்பாட்டினையும் பாராட்டினார்.