மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநில அரசு பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூகம் மற்றும் மாநில அரசு ஊழியர்களின் நலனிலும் அக்கரைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். 2008-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதிலிருந்து அனைத்து துறைகளிலும் துரித வளர்ச்சியடைந்து வருகிறது. மாநில அரசின் ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கொள்கையினால் ஒவ்வொரு ஆண்டும் வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதலான வருமானத்தைப் பெறும் முதல் மாநிலம் பினாங்கு என்று தேசிய கணக்காய்வு அறிக்கை சித்தரிக்கிறது. மேலும், மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் நலனில் மிகுந்த அக்கரைக் கொண்டுள்ளது. மாநில அரசு தனது பொருளாதார இலாபத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மூத்த குடிமக்கள், பொது உயர்கல்வி மாணவர்கள், பாலர் பள்ளி, ஆரம்ப பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகியயோருக்கும் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 1-8-2013-ஆம் நாள் 13-வது பொதுத் தேர்தலுக்குப் பின் முதல் அரசு ஊழியர்களுக்கானக் கூட்டம் கொம்தாரில் நடைபெற்றது. மாநில அரசு ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு அரை மாத போனஸ் அல்லது நோன்புப் பெருநாள் வெகுமதி வழங்கப்படும் என்று மாநில மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். கடந்த ஆண்டும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரை மாத போனஸ் வழங்கப்பட்டது வெள்ளிடைமலையாகும். பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத போனஸ் அல்லது குறைந்த பட்சம் ரிம600 வழங்கப்படும் என்று கொம்தாரில் நடைபெற்ற மாநில அரசு ஊழியர்கள் கூட்டத்தில் அறிவித்தார். மாநில அரசின் தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்ற கோட்பாடு சிறப்பான சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. அரசு ஊழியர்கள் ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை மற்றும் ஒருமைப்பாடு என்ற மாநில அரசின் கொள்கையைப் பின்பற்றி பணிப்புரிய வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இக்கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை நிவர்த்திச் செய்து தூய்மையான மாநில நிர்வாகம் நடத்த வழிவகுக்கப்படும் என முதல்வர் எடுத்துரைத்தார். மாநில அரசின் 9194 ஊழியர்களுக்கும் அரை மாத போனஸ் அல்லது குறைந்த பட்சம் ரிம600 வழங்குவதற்கு மாநில அரசு சுமார் ரிம 10,592,919.81 ஒதுக்கீடுச் செய்துள்ளது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் அரை மாத போனஸ் நிதித் தொகையை மாதிரி காசோலையாக அனைத்து மாநில அரசு துறை உயர் அதிகாரிகளிடம் வழங்கினார்.
அரை மாத போனஸ் பெற்ற மாநில அரசு துறைகள் பின்வருமாறு :
மாநில அரசு துறை | தொகை (ரி.ம) |
மாநில பொது சேவை துறை | 3,479,170.32 |
பினாங்கு மேம்பாட்டுக் கழகம் | 368,814.52 |
பினாங்கு நகராண்மைக் கழகம் | 4,166,600.00 |
செபெராங் பிறை நகராண்மைக் கழகம் | 2,230,833.79 |
பினாங்கு மாநில இஸ்லாம் வாரியம் | 60,000 |
மாநில பொருட்காட்சிசாலை மற்றும் கலை படத்தொகுப்புத் துறை | 19,200.00 |
மாநில பொது நூல்நிலையம் | 162,274.77 |
பினாங்கு ஒருமைப்பாட்டுக் கழகம் | 9,609.74 |
கொடிமலை கழகம் | 62,679.67 |
ஜோர்ச்டவுன் உலக பாரம்பரிய மையம் | 33,737.00 |