ஜார்ச்டவுன் – “தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப இம்மாநிலத்தின் அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டது.
மாநில அரசாங்க ஊழியர்களுக்கான சிறந்த சேவைக்கான விருதளிப்பு (APC) விழாவானது அவர்கள் எதிர்காலத்தில் மேலும் சிறந்த சேவையை ஆற்ற உத்வேகமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழிநடத்தவும் பொது மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும் அர்ப்பணிப்பு வழங்கிய ஊழியர்களைப் பாராட்டுகிறது.
“தற்போதைய நடப்பு தேவைகளுக்கு ஏற்ப, மக்களுக்கு சேவை வழங்குவதில் அதன் தரமும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்.
“எனவே, இந்த அங்கீகாரமும் பாராட்டும் இன்றைய நிகழ்ச்சியில் விருது பெற்ற 317 பெறுநர்களுக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமின்றி, இம்மாநிலத்தில் பணிப்புரியும் அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எப்போதும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு ஊக்கமளிக்கும்,” என்று 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு செயலாளர் டத்தோ ரோஸ்லி இசா; மாநில சட்ட அதிகாரி, டத்தோ ரோஸ்லிண்டா முகமட். ஷாஃபி; மாநில நிதி அதிகாரி, டத்தோ ஜாபிதா சஃபர்; துணை மாநில செயலாளர் (மேலாண்மை), அப்துல் கஹர் அப்துல்லா மற்றும் மாநிலத் துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பினாங்கு2030 இலக்கில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து முன்முயற்சிகளையும் நிறைவேற்றுவதில் மாநில அரசு வெற்றிப் பெற, அரசு ஊழியர்களின் செயல்திறனை வளர்ப்பது மிக அவசியம் என்று கொன் இயோவ் கேட்டுக்கொண்டார்.
“அரசு ஊழியர்கள் என்பது பொதுமக்களின் பார்வையில் மாநில அரசின் பிம்பமாகப் பிரதிபலிக்கும். எனவே, அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எப்போதும் சேவைகளை வழங்கும்போது அதன் தரம் மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
“இந்த மாநில மக்களுக்குத் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க அனைத்து பினாங்கு அரசு ஊழியர்களும் மாநில அரசு நிர்வாகத்திற்கு முழு ஆதரவை வழங்குவார்கள்,” என்றார்.
இதற்கிடையில், அரசு ஊழியர்கள் பதவியில் இருக்கும் அந்தந்த துறைகளுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் சேவையாற்றும் பொறுப்புகள் உள்ளன, என்று ரோஸ்லி கூறினார்.
“ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்கள் தலைமைத்துவத் திறனைத் தொடர்ந்து பராமரிக்கவும் மேம்படுத்தவும் பங்காற்ற வேண்டும்.
“நாம் அனைவரும் மலேசிய மடானியின் ஆறு கூறுகளான நிலைத்தன்மை, நல்வாழ்வு, புத்தாக்கம், மரியாதை, நம்பிக்கை மற்றும் கருணை ஆகியவற்றை பின்பற்றுவது அவசியமாகும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ்,
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறனைக் காட்டிய 21 துறைகள் மற்றும் மூன்று மாநில சட்டப்பூர்வ அமைப்புகளைச் சேர்ந்த 317 அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.