ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு கல்வித் துறைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழுவின் தலைவர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு திறவுகோலாக திகழும் கல்வித் துறையை, கோவிட்-19 தாக்கம் ஏற்பட்ட சூழ்நிலையிலும் கூட மாநில அரசு இதனைப் பராமரிக்கப் புறக்கணிக்கவில்லை என்று அவர் கூறினார்.
“பினாங்கில் இதுவரை 217 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 125 இடைநிலைப்பள்ளிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் உதவிகள் வழங்கி வருகிறோம்.
“2009 முதல் 2021 ஆண்டு வரை, பள்ளி மாணவர்களுக்குத் தரமானக் கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகப் பள்ளியின் பல்வேறு பொது வசதிகளை மேம்படுத்த மாநில அரசு மொத்தம் ரிம126,348,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
“2008 முதல், எனது தொகுதியில் பள்ளிச் சீருடைகளை வாங்குவதற்காக மொத்தம் ரிம400,000 செலவிட்டுள்ளது மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு இதர உதவிகளையும் வழங்கியுள்ளேன்.
“இந்த ஒதுக்கீட்டில், பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிக்காக வழங்கப்பட்ட நிதியம் சேர்க்கப்படவில்லை,” என ஜார்ச்டவுனில் உள்ள டிஃபின்ஸ் செட்டியார் உணவகத்தில் நடைபெற்ற பள்ளிச் சீருடை, புத்தகப் பைகள் மற்றும் காலணிகளுக்கான பற்றுச்சீட்டு வழங்கும் விழாவில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப், இராமகிருஷ்ணா ஆசிரமம், விஸ்மா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மொத்தம் ரிம7,600 மதிப்புள்ள பள்ளிச் சீருடைகள், புத்தகப் பைகள், காலணிக்கான பற்றுச்சீட்டை எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, தொழிலதிபர் டத்தோ ரத்தினம் பிள்ளை, மாணவர்களுக்கு அருமையான மதிய விருந்தோம்பல் அளித்தார். தகுதியானப் பல குழந்தைகளுக்கு மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் எனும் திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டுகளையும் அவர் எடுத்து வழங்கினார்.