பினாங்கு மாநில அரசு தலைவர்கள் 12 முதல் 21 வருடம் பழமையானக் கார்களை தமது போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். இதனால், பல பிரச்சனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதாவது கார் அடிக்கடி பழுதாகுதல், உரிய நேரத்திற்குச் சென்றடைய முடியாமல் திண்டாடினர். இப்பிரச்சனைக்குத் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள 15 தலைவர்களுக்கு தொயோதா கெம்ரி-ரக(TOYOTA CAMRY) காரை வழங்குவதாக அறிவித்திருந்தார். இதன் வெற்றியாக, 30-10-2013-ஆம் நாள் கொம்தாரில் 15 தலைவர்களுக்கும் கார் சாவியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் உரையாடிய மேதகு லிம் குவான் எங் அவர்கள் பழைய அதிகார்ப்பூர்வ கார்கள் மற்ற அரசு துறைகளுக்கு பயன்படுத்தப்படலாம் அல்லது பராமரிப்பு செலவைக் கருத்தில் கொண்டு விற்கப்படலாம் எனக் கூறினார். இதற்கு முன்பு அறிவித்தது போல, கடந்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு காருக்கு மட்டும் தலா ரிம20,000 முதல் ரிம30,000 வரை செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டும் 21 அதிகாரப்பூர்வ கார்களுக்கும் மட்டும் ரிம370,400-மும் 2012-ஆம் ஆண்டு ரிம383,000-மும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரிம 301,238 செலவிடப்பட்டதாக அறிவித்தார் மாநில முதலவர்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வருடன் முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரணக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ், இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங், சுற்றுலா வளர்ச்சி மற்றும் பண்பாட்டு செயற்குழு உறுப்பினர் லாவ் ஹெங் கியாங், வேளாண்மை மற்றும் வேளாண்மை கிராமப்புற மேம்பாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பஹாருடின், சமயம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் செயற்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் அப்துல் காசிம், மாநில அரசின் செயலாளர் டத்தோ ஃபரிசான் டாருஸ் மற்றும் மாநில நிதியியல் அதிகாரி டத்தோ மொக்தார் ஜாட் அடங்குவர்.