ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு சமூகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை நடத்தும் அரசு சாரா அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
“பினாங்கில் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என பல்லின மக்களின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வசதிக் குறைந்தவர்களுக்கும் தகுதியுடையவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் தங்கள் பங்கை ஆற்றி வருவது மன நிறைவை அளிக்கிறது.
“முக்கியமாக, கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையில், பொது மக்களின் உயிர்களும் வாழ்வாதாரமும் அச்சுறுத்தப்பட்டபோது அவர்கள் ஆற்றிய சேவையின் மூலம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது.
“எனவே, அரசு சாரா இயக்கங்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் வாயிலாக பினாங்கு வாழ் மக்களின் நலனுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த முடிகிறது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு முக்குலத்தோர் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது இவ்வாறு உரையாற்றினார்.
மேலும் பேசிய முதல்வர் சாவ், பினாங்கு முக்குலத்தோர் சங்கம் கெடா சாலை வளாகத்தில் அமைந்த இப்புதிய கட்டிடம் அமைக்க எடுத்த முயற்சிகளை அவர் மனதாரப் பாராட்டினார்.
மேலும், பினாங்கு முக்குலத்தோர் சங்கம் இலக்குகளையும் கொள்கைகளையும் அடைய மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் மானியம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மலேசிய முக்குலத்தோர் கழகத் தலைவர் கண்ணு சிவக்குமார்; பினாங்கு முக்குலத்தோர் சங்கத் தலைவர் இராமன் மற்றும் அக்கழக நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“பினாங்கு முக்குலத்தோர் சங்கம் 1973 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கடந்த 48 ஆண்டுகளாக சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை ஆற்றி வருகிறது. தற்போது, மலேசியா முழுவதும் 12 முக்குலத்தோர் கிளைகள் உள்ளன,” என பினாங்கு முக்குலத்தோர் சங்கத் தலைவர் இராமன் தெரிவித்தார்.
பினாங்கு முக்குலத்தோர் சங்கம் அதன் உறுப்பினர்களின் நலனில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, இராமகிருஷ்ண ஆசிரமம் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்குத் தொண்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை பினாங்கில் உள்ள இந்திய சமூகத்திற்காக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
“பொதுவாகவே, மலேசிய பல்லின மக்கள் நல்லிணக்கம் பேணி ஒன்றிணைந்து வாழ்வது பாராட்டக்குறியது. இந்நாட்டில் பல்லின மக்களுடன் இணைந்து வாழக்கூடியது அதிர்ஷ்டமாகக் கருத வேண்டும்.
“நமது மதம், பாரம்பரியம், கலாசாரம் வேறுப்படலாம்; ஆனால் நம்மிடையே உள்ள ஒற்றுமைக்கு பங்கம் வரக்கூடாது. அதனைப் பராமரிக்கும் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.
“மேலும், அனைத்து மலேசியர்களும் அடுத்துவரும் தலைமுறையினருக்கு நம்பிக்கை மற்றும் இன பேதத்தைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையைப் பேணுவதன் அவசியத்தை கற்பிக்க வேண்டும்,” என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, இச்சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழாவின் போது அச்சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அல்லது வாரிசுகள் இணைந்திருப்பது அவசியம் என சாவ் வலியுறுத்தினார். இதன்மூலம், அவர்களும் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பை அறிந்து அதனை பின்தொடர்ந்து எதிர்காலத்தில் அவர்களும் செயலாற்ற முடியும் என சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பினாங்கில் மட்டும் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.