ஜார்ச்டவுன் -பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தில் சுற்றுச்சூழல் தூய்மையைப் பராமரிக்க முன்னுரிமை அளிக்கிறது என்று உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
தீவு மற்றும் செபராங் பிறையின் பல பகுதிகளில் வடிக்கால்கள் தூய்மையற்ற நிலையில் இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆங்கில தினசரி( English daily) நாளிதழில் வெளியிட்ட செய்தியைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தியில் பயனீட்டாளர் சங்கம்
சில பகுதிகளில் காணப்படும் வடிகால்கள் மேம்பாட்டுப் பணிகள் குறிப்பாக அவற்றை அகலப்படுத்துதல் அல்லது ஆழப்படுத்துதல் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.
மாநில அரசு வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டு செயல்படுகிறது. எனவே அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம். அவ்வகையில் பயனீட்டாளர் சங்கத்தின் கருத்துக்கும் செவிச்சாய்க்கிறோம் என கூறினார்.
பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களையும் வடிக்கால்கள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய இடங்களை அடையாளங்காணுமாறு பணித்துள்ளேன்.
இரு ஊராட்சி மன்ற பொது ஊழியர்களும் தினமும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பராமரிக்க தவறியதில்லை. எம்.பி.பி.பி கழகத்தில் மட்டுமே துப்புரவுப்பணி மேற்கொள்ள 500 தனியார் நிறுவன ஊழியர்களுடன் மொத்தமாக 1,300 பொது ஊழியர்கள் வேலை புரிகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏறக்குறைய 14,437 டன் குப்பைகள் அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 39.5 டன்கள் சேகரிக்கப்பட்டன. இந்த புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடும்போது, 2019 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 27.6 டன்களும் மொத்தமாக 10,076 டன் கழிவுகளாகக் குறைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
2019-ஆம் ஆண்டின், அமலாக்க நடவடிக்கையின் போது தூய்மையற்ற உணவகங்களுக்கு மொத்தம் 442 நோட்டிஸ்
வழங்கப்பட்டன, கடந்த நான்கு மாதங்களில் 18 தூய்மையற்ற உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டன.
எம்.பி.பி.பி கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்து வடிக்கால் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த ரிம 7.5 மில்லியனும், 2019-ஆம் ஆண்டு ஆறு திட்டங்கள் நிறைவுப்பெற ரிம11 மில்லியனும் செலவிட்டுள்ளதாக விளக்கமளித்தார். அதேவேளையில் இந்த ஆண்டு ஏழு வடிக்கால் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த ரிம6.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெக்டிப் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப தூய்மையான, பசுமையான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பினாங்கு மாநிலத்தை உருவாக்க வேண்டும். எனவே, மாநில அரசு தூய்மையைப் பராமரிக்க முன்னுரிமை அளிக்கிறது என்றால் மிகையாகாது.
“எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி ஆகிய இரு ஊராட்சி மன்றங்களும் பொதுச் சந்தைகள், உணவக மையங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற பொது வசதிகளின் தூய்மையை மிகுந்த பொறுப்புடன் பராமரிக்கிறது. ஏனெனில் இந்த பகுதிகளில் தூய்மையின் மட்டத்தில் முன்னேற்றம் காண முடிகிறது.
செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.பி.பி தலைவர் டத்தோ இயூ துங் சியாங், எம்.பி.பி.பி தூய்மையான நகரம் என பல பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் பெற்றிருந்தாலும், அவர்கள் தங்கள் கடமைகள் ஆற்ற தவறியதில்லை என்றார்.
“ஆயுனும் மாநிலத்தின் தூய்மையைப் பாதுகாக்க எங்களுடன் ஒத்துழைக்குமாறு உணவக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
“2019 ஆம் ஆண்டில் அமலாக்க நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட 442 நோட்டிஸ்களில், 93 விழுக்காடு கிரீஸ், எண்ணெய் அல்லது குப்பைகளை வடிகால்களில் வெளியேற்றுவது போன்ற குற்றங்களுக்காக வழங்கப்பட்டன.
“நாங்கள் இந்த விவகாரத்தில் தளர்வு மனப்பான்மையைப் பின்பற்ற மாட்டோம். கடந்த நவம்பர் மாதம் (2019) முதல், கிரீஸ் பொறியை நிறுவாததற்காக 18 உணவகங்களை மூடிவிட்டோம். எனவே சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம், ”என்று இயூ கூறினார்.