பினாங்கு மாநில அளவிலான தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்க விழா கண்டது

Admin

ஜார்ச்டவுன் -பினாங்கு மாநில அளவிலான தேசிய தடுப்பூசி திட்டத்தை மாநில  முதல்வர், மேதகு சாவ் கொன் யாவ்  இன்று 

பினாங்கு பொது மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசியைப் (Pfizer-BioNTech) பெற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மாநில முதல்வர் தடுப்பூசி பெறுவதற்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்திடும் முன்பு விளக்கம் அளிக்கப்பட்டது. பதிவுக்குப் பின்பு, தாதியர் மேலாண்மையாளராகப் பணிப்புரியும் மெட்ரன் ஹபீசா ஹம்ஸா முதல்வருக்கு கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தினார். 

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை நிறைவுச்செய்ய ஏறக்குறைய 30 நிமிடங்கள் எடுக்கப்படுகிறது. 

இன்று கோவிட் -19 தடுப்பூசியை மாநில முதல்வரை தவிர்த்து,  பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ சஹாபுதீன் அப்துல் மனன்; முதலாம் துணை முதல்வர், டத்தோ அமாட் ஜாகியுதீன் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி; மாநில செயலாளர், டத்தோ அப்துல் ரசாக் ஜாஃபர்; பினாங்கு மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் அஸ்மயானி காலிப் மற்றும் ஆறு மருத்துவ ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர். 

மாநில அரசு தலைவர்கள் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம்  கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் இம்மாநில மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நம்பிக்கையை அளிக்கும், என்றார். 

“அதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 தடுப்பூசி ஊசி செயல்முறை வலி இல்லாமல் சீராக செலுத்தப்பட்டது. 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, இரத்த அழுத்தமும் பரிசோதனை செய்யப்பட்டது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது.

“எனவே, பினாங்கு வாழ் பொது மக்கள் தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை ஆதரிக்க ‘மைசெஜ்தெரா’ செயலியில் பதிவு செய்து பின்னர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

அண்மையில், பினாங்கு மாநிலத்தில் 16,380 டோஸ் கோவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளன. முதல் கட்ட  திட்டத்தை நிறைவுச்செய்ய மேலும் ஐந்து ஏற்றுமதிகள் பெறப்படும் என கொன் யாவ்  கூறினார்.

“எனவே, இத்திட்ட முதல் கட்டத்தில் 31,000 நபர்களை உள்ளடக்கிய முன் வரிசை பணியாளர்களை தடுப்பூசி பெறுவர், என்று கூறினார்.

மேலும், அனைத்து தரப்பினரும் தடுப்பூசி பெற்ற பிறகும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி)  தொடர்ந்து பின்பற்ற வேண்டும், என நினைவுறுத்தினார்.

” ஒரு வருட குறுகிய காலத்தில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு  மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த தடுப்பூசியின் மூலம், கோவிட்-19  மீதான போரில் இருந்து விடுப்பட்டு, மீட்சி செயல்முறைக்குச் செல்லலாம்,” என்று  கருத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி,பினாங்கில் இதுவரை 54 தடுப்பூசி செலுத்துநர்கள் உட்பட 318 முன் வரிசை பணியாளர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். 

“முன் வரிசையில் பணியாளர்கள்  மருத்துவம் அல்லது சுகாதாரத் துறை மற்றும் மலேசிய அரசு காவல்துறை (பி.டி.ஆர்.எம்), மலேசிய தன்னார்வத் துறை (ரெலா) போன்றவர்கள் என இரண்டு வகைக்கு உட்படுத்தப்படுவர்,” என்று விளக்கமளித்தார்.

பினாங்கு மாநிலம் இந்த முதல் கட்டமாக  62,000 டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப்  பெறும் என அறிகிறது.

இம்மாநிலத்தில் உள்ள 1.78 மில்லியன் மக்கள் தொகையில்  1.3 மில்லியன் பேர்கள் மூன்று கட்டங்களாக வருகின்ற 2022 பிப்ரவரியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த
கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவர்.