கடந்த 29-6-2013-ஆம் நாள் பினாங்கு மாநில இந்திய சங்க ஏற்பாட்டில் காற்பந்து போட்டி இனிதே நடைபெற்றது. இந்தப் போட்டி பாகான் ஜெர்மால், இந்திய சங்கத் திடலில் இடம்பெற்றது. பினாங்கு மாநில இந்திய சங்கம் இந்தியர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு பல போட்டிகளை ஏற்று நடத்துக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 25 வயதுக்கு மேற்பட்ட இளையோர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
இந்தப்போட்டியின் தொடக்க விழாவில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். இந்தப் போட்டிக்கு இரண்டாம் துணை முதல்வர் ரிம 10,000 மானியமாக வழங்கியது சாலச்சிறந்ததாகும்.
இந்தக் காற்பந்து போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்து 15 குழுக்களும் சிங்கப்பூர் நாட்டைப் பிரதிநிதித்து 1 குழுவும் கலந்து கொண்டனர் என்று இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் கலை குமார் நாச்சி தெரிவித்தார். இறுதிப் போட்டியில் பினாங்கு இந்திய காற்பந்து குழுவும் சிங்கப்பூர் இந்திய காற்பந்து குழுவும் நேருக்கு நேர் களம் இறங்கியது. இதில் பினாங்கு இந்திய காற்பந்து குழு பெனால்டியில் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் சிங்கப்பூர் இந்திய காற்பந்து குழுவை வீழ்த்தி வெற்றி வாகைச் சூடியது. முதல் நிலை வெற்றியாளரான பினாங்கு இந்திய காற்பந்து குழு ரிம 1500 மற்றும் சுழற்கிண்ணத்தையும் சன்மானமாகப் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் நிலை வெற்றியாளரான சிங்கப்பூர் இந்திய காற்பந்து குழு ரிம 1000 மற்றும் சுழற்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
நம் நாட்டு இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் பீடுநடைப் போடுவதற்கு பினாங்கு இந்திய சங்கம் என்றும் ஒரு வழிகாட்டியாக அமையும் என அச்சங்கத்தின் தலைவர் திரு ஆனாந்த கிருஷ்ணன் நாயுடு கூறினார்.