பினாங்கு மாநில கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Admin

கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு பிதா மண்ணுலகில் அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி உலகில் வாழும் அனைத்து இனத்தவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அதற்கு வழிவகுக்கும் பொருட்டே மலேசியாவெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் திறந்த இல்ல பொது உபசரிப்புகளும் விருந்து நிகழ்ச்சிகளும். நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் அண்மையில், பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 16-இல் ஃபொர்ட் கொன்வலிஸ் தளத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து ஐந்தாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சிறப்பு வருகையளித்தார்.

இவ்வாண்டின் கருப்பொருள் ‘உலக நம்பிக்கையாம் இயேசு பிதா’ என்பதாகும். பல பாவங்களைச் செய்து இருள் சூழ்ந்துள்ள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வரவே இயேசு பிதா பிறந்துள்ளதாகக் கூறப்படுகிறதென்று இக்கொண்டாட்டத்தின் செயற்குழுத் தலைவர் அரோக்கிய தாஸ்  வரவேற்புரையாற்றுகையில் கூறினார். மனிதரின் பாவங்களை மன்னித்து அவர் நல்வழியில் வாழ வாய்ப்பளித்து நம்பிக்கையூட்டும் அன்பின் உருவே இயேசு பிதா என்றார்.

அன்றிரவு கனத்த மழை பெய்த போதிலும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மெருகூட்டினர். இம்மழைக்கு இடையே மாநில முதல்வரின் வருகை அனைவரையும் உட்சாகமூட்டியதென்றே சொல்ல வேண்டும். கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர் அல்லாதவர்கள் என பல்லின மக்களும் இம்மலேசிய நாட்டில் நல்லிணக்கத்தோடும் ஒற்றுமையுடனும் சுபிட்சத்துடனும் வாழ வேண்டும் என்று முதல்வர் லிம் தம் சிறப்புரையில் கேட்டுக் கொண்டார். மேலும், மலேசிய நாட்டின் சமயச் சுதந்திரம் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பினாங்கு மாநிலத்தில் அச்சுதந்திரம் காக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

282568_563498503667604_983170896_n

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை உல்லாசமாகக் கொண்டாடி மகிழும் இந்தியச் சிறுவர்கள்

 

பினாங்கில் உள்ள பல தேவாலயத்தைச் சேர்ந்த பல இளையோர்கள் இக்கொண்டாட்டத்தில் பங்குபெற்று பல மேடைப்படைப்புகளை வழங்கி வந்திருந்தவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர். ஆங்கிலப் பாடல் மட்டுமன்றி இயேசு கிறிஸ்துவின் புகழைப் பாடும் தமிழ் பாடலுக்கு நம் இந்திய சிறுவர்கள் அபிநயம் பிடித்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தமிழ் மொழி தெரியாத சீனர்களும் அப்பாடலுக்கு உல்லாசமாக ஆடி மகிழ்ந்தது கிறிஸ்துமஸ் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தது.

இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பினாங்கு கிறிஸ்துவக் கூட்டமைப்பின் தலைவர் திரு அந்தோனி செல்வநாயகம், திரு கிறிஸ்தபர் தான், திரு சாம் சுரேந்திரன், திரு செபஸ்தியன் ஃபரன்சிஸ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.