நிபோங் திபால் – பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சுழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு அப்பள்ளியின் புதிதாக நிறுவப்பட்ட வள்ளூவர் பல்நோக்கு மண்டபத்தையும் திறந்து வைத்த போது டத்தோஶ்ரீ சுந்தராஜு இவ்வாறு கூறினார்.
பினாங்கு மாநில அரசு 28 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஆண்டுதோறும் ரிம2 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த ஒதுக்கீட்டை கொண்டு இம்மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் சிறந்த முறையில் சேவைகளை வழங்கி வருகின்றோம்.
அண்மையில் ரிம65,000 செலவில் மாணவர்கள் மீள்பார்வை செய்ய பயிற்சி புத்தகங்கள் வழங்கினோம். மேலும், மாணவர்களும் பெற்றோரும் பயன்பெறும் வகையில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதனிடையே, இந்திய மாணவர்களிடையே கல்வித் தரத்தை மேலோங்க உதவும் வகையில் பினாங்கு மாநிலத்தில் விரைவில் கல்வி அறவாரிம் அமைக்கப்படவுள்ளதை டத்தோ ஶ்ரீ சுந்தராஜு அறிவித்தார்.
அத்தினத்தன்று கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கோப்பையும் ஆட்சிக்குழு உறுப்பினர் எடுத்து வழங்கினார்.
அண்மையில் தஞ்சோங் மாலிமில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் இப்பள்ளியை பிரதிநிதித்து மாணவர்கள் பங்குபெற்று இரண்டாம் நிலையில் வெற்றி வாகைச் சூடினர். இவர்கள் ஸ்மார்ட் அளாமை வடிவமைத்து பள்ளிக்குப் பெருமை சேர்ந்தனர்.
இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மூன்று மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இப்பரிசளிப்பு விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம் மாணிக்கம், பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் பாலசுந்தரம், கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.