மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கம் மரியாதை நிமிர்த்தம் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களை நேரில் சந்தித்தனர். 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி ஆட்சிப்பீடம் அமைந்த தருணம் முதல் இன்று வரை மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்றார் அதன் தலைவர் டத்தோ வசந்தராஜன். இந்நிகழ்வில்கலந்து கொண்ட மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து மாநில முதல்வரிடம் மகஜர் வழங்கினர். டத்தோ வசந்தராஜன் வழங்கிய மகஜரில் பல கோரிக்கைகள் இடம்பெற்றன. அவை பின் வருமாறு:-
லிட்டல் இந்தியா வர்த்தகத்தைச் சித்தரிக்கும் வகையில் பிரமாண்டமான நுழைவாயில் அமைத்தல்.
லிட்டல் இந்தியா பகுதியில் வண்ண மயமான விளக்குகள் பொருத்துதல்.
பினாங்கு மாநிலம் மற்றும் சென்னை,தமிழ்நாடு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த “Trade city program” திட்டம் மேற்கொள்ள வேண்டும்.
சாலை நெரிசல் மற்றும் கார் நிறுத்தும் இடப்பற்றாக்குறை களைய வேண்டும்.
வெளிநாடுகளில் இடம்பெறும் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும்
லிட்டல் இந்திய வர்த்தகத்தை பெருநிலப்பகுதியான பத்து கவான் பகுதியில் விரிவாக்கம் செய்தல்; கெபாலா பத்தாஸ் பகுதியில் இந்தியர்களுக்காக விளையாட்டு சங்கம் அமைத்தல்.
வர்த்தகத் தொழிலியல் சங்கம் வழங்கிய மகஜரை மாநில முதல்வர் மற்றும் நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் அகம் மலர பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் சாலை நெரிசலால் தீயணைக்க சிரமம் அடைந்ததை சுட்டிக்காட்டினார் டத்தோ வசந்தராஜன். விழாக்காலங்களில் கார் நிறுத்துமிடப் பற்றாக்குறை ஏற்படுவதால் வர்த்தகம் அதிகமாக பாதிப்படைவதாக மேலும் தெரிவித்தார். அனைத்துலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் மலாய், சீன மற்றும் இந்திய வர்த்தகச் சங்கங்களுக்குக் கண்டிப்பாக பினாங்கு மாநில அரசு வாய்ப்பு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர். 2016-ஆம் ஆண்டில் காலடி வைத்த நாம் அனைவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது என்றார். இருப்பினும், பினாங்கு மாநிலத்தில் சுற்றுலாத்துறை தொடர்ந்து மாநில பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்வதோடு வர்த்தகத்திற்கும் இலாபத்தை ஈட்டுவதாகத் தெரித்தார்.
மாநில முதல்வர் வர்த்தகத் தொழிலியல் சங்கம் முறையிட்ட கோரிக்கைகளில் நுழைவாயில் அமைத்தல், சாலை நெரிசல் மற்றும் கார் நிறுத்தும் இடப்பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் கூடிய விரைவில் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். வர்த்தகத் தொழிலியல் சங்கம் வழங்கிய மகஜர் மூலம் அச்சங்கத்தின் பிரச்சனைகள் தீர்க்க வாய்ப்பு இடம்பெறுவதாகக் கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
மேலும், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான திரு தனசேகரன், திரு நேதாஜி இராயர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.