மொழி வாழ்வில் ஒரு முக்கியமானத் தகவல்தொடர்புக் கருவியாகத் திகழ்கிறது. இது ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் நாகரீகத்தின் அடையாளமாகவும் அமைகிறது. மொழி நம் நாட்டு மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சித்தரிக்கின்றது என்றால் மிகையாகாது. இதனை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில மாநகராட்சியின் ஏற்பாட்டில் தேசிய மொழி மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இதனை பினாங்கு மாநில மாநகராட்சிக் கழகத் தலைவர் டத்தோ பதாயா பின்தி இஸ்மாயில் அவர்களின் பொற்கரத்தால் கொம்தார் பொது மண்டபத்தில் தொடக்கி வைத்தார். நிகழ்வை மெருகூட்டும் பொருட்டு பினாங்கு மாநகராட்சி ஊழியர்களின் படைப்புகளும் இடம்பெற்றன.
மேலும், இக்கொண்டாட்டத்தின் நோக்கமானது நம் பினாங்கு சமூகத்தினரை உட்படுத்தும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தேசிய மொழியை வலுப்படுத்துவதே ஆகும். தேசிய மொழி மாதம் குறிப்பாக அனைத்து குடிமக்கள், இளைஞர்களுக்கு ஒரு அணுகுமுறையாக அமையும். பினாங்கு மாநகராட்சிக் கழகம் அக்டோபர் தொடங்கி டிசம்பர் 2013 வரை பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அவற்றில் தேசப்பக்தி பாடல் போட்டி, கதை போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, குறுக்கெழுத்து, பேச்சுத்திறன் போட்டி மற்றும் மற்றும் பல போட்டிகள் நடைபெறும்.
தேசிய மொழி ஒரு அதிகாரப்பூர்வ மொழியாகவும், அறிவார்ந்த மொழியாகவும் பினாங்கு மாநில அனைத்து சமூகத்தினரின் ஒற்றுமை மற்றும் சமூக ஈடுபாடு உணர்வை மேம்படுத்தும் முயற்சியாகவும் திகழும் என மாநகராட்சித் தலைவர் டத்தோ பதாயா பின்தி இஸ்மாயில் கூறினார். இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.