ஸ்ரீ ஐயப்பன் சேவா சமாஜம் 2005-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த சேவா சமாஜத்திற்கு குருநாதர் திரு ஞானசேகரன் வழிகாட்டியாகவும் 150 உறுப்பினர்கள் தொண்டர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர். இந்த சேவா சமாஜம் தற்காலிகமாக லெபோ நம்பியார், ஜோர்ச்டவுன் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த சேவா சமாஜம் நிரந்தரமான இடத்திற்குக் கூடிய விரைவில் மாறிச் செல்லும் பொருட்டு நிதி திரட்ட முற்பட்டுள்ளனர். அவ்வகையில் கடந்த 21-7-2013-ஆம் நாள் இந்த சேவ சமாஜத்திற்குப் புதிய கட்டட நிதித் திரட்ட உணவுச் சந்தை நடத்தப்பட்டது. இந்த உணவுச் சந்தை அஸாட் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த உணவுச் சந்தை நிகழ்வின் மூலம் ஏறக்குறைய ரிம5000 நிதித் திரட்டப்பட்டதாக சேவ சமாஜத்தின் செயலாளர் திரு தமோதிரன் தெரிவித்தார். இந்த உணவுச் சந்தையில் பினாங்கு மாநில புகழ்ப்பெற்ற உணவுத் தயாரிப்பாளர்கள், உணவுக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு நிதித் திரட்ட உதவி கரம் நீட்டினர். மேலும் இந்த சந்தையில் சுகாதார முகாம், விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
மேலும் இந்த உணவுச் சந்தை நிகழ்வில் முக்கிய பிரமுகராகக் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் கலந்து கொண்டார். மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் இந்த சேவா சமாஜத்தின் நிதி உதவிக்காக ரிம10 000 மானியமாக வழங்கினார். கடந்த ஆண்டு ரிம8000 வழங்கினார் என்பது சாலச்சிறந்தது. இந்த சேவா சமாஜத்திற்கு வற்றாத ஆதரவு வழங்கும் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்களுக்கு நன்றி மாலைச் சூட்டினார் தலைவர் திரு டவிந்திரன்.
இந்த சேவ சமாஜம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூகத்தினருக்கும் பல வழிகளில் துணைபுரிகின்றனர் என்றால் மிகையாகாது. அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்காக ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் ஊனமுற்றோர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியயோருக்குத் தீபாவளி பரிசு மற்றும் மதிய உணவு வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த சேவா சமாஜத்தில் 500 மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் இடிமுடிக் கட்டித் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர் என்பது வெள்ளிடைமலையாகும்.
இந்த சமாஜம் கூடிய விரைவில் நிரந்தரமான இடத்தில் செயல்படுவதற்கு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ உதவி கரம் நீட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.