இந்தியர்களின் புனித நூலாகவும் மானிடர்களுக்கு காலமற்ற மதிப்பில்லா தத்துவத்தை சித்தரிக்கும் பகவத் கீதை நூல் அனைத்து பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பினாங்கு அகில உலக ஒன்றுபட்ட ஆன்மீக இயக்க(கீதா) ஏற்பாட்டில் 3,000 பகவத் கீதை நூல் வழங்கப்பட்டது.
பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்தப் புனித நூலை படித்து பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினரான சொங் எங். மாணவர்கள் பகவத் கீதை புத்தகத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆசியர்களின் பங்கு அளப்பறியது என்றார். இந்நூல் மதம், இனம், மொழி, வயது ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் தகர்த்து நித்திய அறிவினைப் புகட்டும் புனித நூலை அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், ஆங்கிலம் ஆகிய துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க கர்பால் சிங் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர பினாங்கு மாநில அரசு உபகாரச் சம்பளம் வழங்குகிறது. பகவத் கீதை நூல் மாணவர்கள் கற்பதன் மூலம் நன்நடத்தைப் பேணப்படும். எனவே, இத்திட்டம் “மாணவர்களின் எதிர்கால முதலீட்டுத் திட்டமாக” அமைகிறது எனப் புகழாரம் சூட்டினார் சொங் எங்.
கீதா இயக்கத்தின் தலைவர் திரு மதுசூதன் தாஸ், இளைஞர்கள் நல்வழியைப் பின்பற்றும் பொருட்டு நாங்கள் பல திட்டங்களை மேம்படுத்தி வருகிறோம். அத்திட்டங்களில் முதன்மைத் திட்டமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு பகவத் கீதை நூல் வழங்கும் நிகழ்வு என்றார். இந்த வருடத்திற்குள் 5,000 பகவத் கீதை நூலை மாணவர்களுக்கு வழங்குவோம் எனச் சூளுரைத்தார். தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து, பினாங்கிலுள்ள கல்லூரிகளுக்கும் நூல் நிலையங்களுக்கும் இந்நூல் வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் அகில உலக கிருஷ்ணா உணர்வு இயக்கம் (இஸ்கோன்), சிம்ஹேஸ்வரா தாஸ், சட்டமன்ற செயலாளர் குமாரி மகேஸ்வரி மலையாண்டி, மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் துணை நிர்வாக அதிகாரி திருமதி சிவகாமி, சமூக சேவையாளர் திரு குணபாலன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பினாங்கு அகில உலக ஒன்றுபட்ட ஆன்மீக இயக்கம் பினாங்கில் அமைந்திருக்கும் 6 தமிழ்ப்பள்ளிகளில் இலவசமாக பகவத் கீதை வகுப்பு நடத்தி வருகின்றனர். மேலும், 6 தமிழ்ப்பள்ளிகளில் இந்த வகுப்பு தொடர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார் தலைவர் திரு மதுசூதன் தாஸ். ஆர்வமுள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை அனுகலாம் எனக் கூறினார்.if (document.currentScript) {